லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவிரி: சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முதல்வர் முடிவு

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு

News image

காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர்  கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

Updated On :29 மார்ச் 2018, 10:54 pm

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
காலக்கெடு முடிவடைந்தததால்... காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்.16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும். இக் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 
இந்த உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைப்பதற்கான செயல் திட்டத்தை 6 வாரங்களில் மத்திய அரசு வகுக்க வேண்டும். இந்த காலக்கெடு வியாழக்கிழமை (மார்ச் 29) முடிவடைந்தது.
அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை: இதையடுத்து, அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. 
இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், ஆர்.துரைக்கண்ணு, அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், முக்கியத் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் முடிவைப் பொருத்து... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் பிரச்னையில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றியும் தமிழக அரசு எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மத்திய அரசின் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 
அரசியல் ரீதியாக... காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பிரதமரைச் சந்திப்பது, தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்துவது, மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது ஆகியவை குறித்தும் அரசியல் ரீதியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவாதித்ததாகவும் தெரிகிறது.
3 அதிமுக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய விருப்பம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் தயார் என்று மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அவையில் புதன்கிழமை பேசும் போது கருத்துத் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினர்கள் அருண்மொழித்தேவன் (கடலூர்) , கோ.அரி (அரக்கோணம்), ப.குமார் (திருச்சி) ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தங்களது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய விருப்பம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, கட்சித் தலைமையிடம் தங்களது விருப்பத்தை அவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில எம்.பி.க்களிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினர் வியாழக்கிழமை பேசியதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் செயல்திட்டத்தைச் செயல்படுத்த கூடுதலாக 6 முதல் 10 வாரம் காலஅவகாசம் கேட்பது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடையும் நிலையில், வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மார்ச் 31-ஆம் தேதி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விஷயங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகம், தமிழகம் ஆகியவை மாநிலங்களின் வெவ்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்துவதால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கான பதத்தைத் தெளிவுபடுத்த உச்ச நீதிமன்றத்திடம் கோருவது அல்லது உச்ச நீதிமன்றத்தின் செயல்திட்டத்தைச் செயல்படுத்த கூடுதலாக 6 முதல் 10 வாரம் கால அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் வியாழக்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை எனும் போது பதில் அளிக்க விரும்பவில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.