
தென்னிந்திய நதிகள் இணைப்பே தமது கனவு என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நதிகளை இணைத்த அடுத்த நாளே கண்களை மூடினாலும் கவலையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை யில் புதன்கிழமை நடைபெற்றது. படக் குழுவினரோடு இணைந்து படத்தின் பாடல்களை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியது:
நாம் கடைசியாக வெற்றி விழா கொண்டாடிய படம் சிவாஜி. அந்த விழாவுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வந்திருந்து வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசிய விஷயம் மறக்க முடியாத ஒன்று. தமிழ்நாட்டின் மூலையெங்கும் 75 ஆண்டுகளாக ஒலித்த அந்தக் குரல் மீண்டும் கேட்காதா என தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். கூடிய விரைவில் அந்தக் குரல் ஒலிக்கும் என நம்புகிறேன். ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
சிவாஜிக்குப் பின் எந்திரன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், அந்தப் படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட முடியவில்லை. என் உடல்நலக் குறைவும் அதற்கு ஒரு காரணம். மருத்துவ சிகிச்சைக்குப் பின் மூளையை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், பிடித்ததை செய்யச் சொன்னார்கள். மனசு கெட்டுப் போய் விட்டால் உடம்பு கெட்டு விடும். எனக்கு சினிமாதான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்தேன்.
உடல்நலக் குறைவால் கைவிடப்பட்ட ராணா படத்தை, அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கோச்சடையான் என்ற பெயரில் எடுத்தோம். அந்த படமும் சரியாகப் போகவில்லை. அதனால் வெற்றி விழா கொண்டாட முடியவில்லை.
வாழ்க்கையின் ஒரே கனவு: அதன் பிறகு நேரடியாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்தேன். அந்த படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால், அந்தப் படம் தண்ணீர் பிரச்னையைப் பற்றியது. தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு அணை கட்டுவதாக அந்தக் கதை இருக்கும். இமயமலைக்கு அடிக்கடி நான் செல்வதே கங்கை நதியைப் பார்க்கத்தான். அங்கே போய்ப் பார்த்தால், கங்கை நதி சில இடங்களில் ரௌத்ரமாகப் பாயும். சில இடங்களில் மௌனமாகப் பயணிக்கும். அதைப் பார்க்கும் போது ஒரு மாதிரி இருக்கும். என் வாழ்க்கையில் ஒரே கனவு, தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான். அதற்கு அடுத்த நாளே என் கண்களை மூடி விட்டால் கூட கவலையில்லை.
லிங்காவும் நினைத்த அளவுக்குப் போகவில்லை. அப்போது நான் உணர்ந்த விஷயம். நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.
அப்போதுதான் என் வயதுக்கு ஏற்ற படங்களைத் தேர்வு செய்யலாம் என்று தோன்றியது.
தொடர்ந்து படங்கள் சரியாகப் போகாத காரணத்தால், ரஜினி அவ்வளவுதான் என்றார்கள். சிலர், இந்த குதிரை என ஓடிக் கொண்டே இருக்கிறது என யோசித்தார்கள். ஆண்டவன் ஓட வைக்கிறான், இந்த ரசிகர்கள் ஓட வைக்கிறார்கள். நான் என்ன செய்வது?
யார் என்ன சொன்னாலும் என் பாதையில் நான் போய்க் கொண்டே இருக்கிறேன். அப்போதுதான் இயக்குநர் பா.ரஞ்சித் சொன்ன கபாலியில் நடித்தேன். நான் எதிர்பார்க்காத வெற்றியை அந்தப் படம் கொடுத்தது.
படத்தில் அரசியல் உண்டு: இப்போது காலா. இது அரசியல் படம் கிடையாது. ஆனால் படத்தில் அரசியல் உண்டு. இது என் படமாகவும் இருக்கும். ரஞ்சித் படமாகவும் இருக்கும். நிறைய வித்தியாசங்கள் இருக்கும். என் திரைப்பட வரலாற்றில் பாட்ஷா ஆண்டனி, படையப்பா நீலாம்பரி இரண்டும் சவால் நிறைந்த வில்லன்கள். அந்த பாணியில் நானே படேகர் நடித்திருக்கிறார்.
நல்ல விஷயங்களை யோசியுங்கள்: ரசிகர்களுக்கு தாய், தந்தைதான் முக்கியம். அடுத்து குடும்பம் முக்கியம். அதை பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் நம் கோட்டை. நீ என்ன யோசிக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒவ்வொரு கலர் உண்டு. அதை நாம் உணர வேண்டும். நல்ல விஷயங்களை யோசியுங்கள். அரசியல் அறிவிப்புக்கான நேரம் இன்னும் வரவில்லை. கடமைகள் நிறைய இருக்கின்றன. ஆண்டவனின் ஆசீர்வாதத்தால், மக்களின் அன்பினால் தமிழ்நாட்டுக்கு நல்ல நேரம் விரைவில் வரும் என்றார் ரஜினிகாந்த்.
விழாவில் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






