மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுத் திட்டம் தமிழக மக்களையும், உழவர்களையும் ஏமாற்றும் வேலை என்பது நன்றாகத் தெரியும் நிலையில், அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஆணையிடுவது தான் உச்சநீதிமன்றத்தின் கடமை ஆகும். ஆனால், மத்திய அரசின் வரைவுத் திட்டம் சரியா, தவறா? என்பதை ஆராய்வது எங்களின் வேலையல்ல; அதை செயல்படுத்த வைப்பது தான் எங்களின் வேலை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு முன் கடந்த 8&ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்த போது, ‘‘ மத்திய அரசு அமைக்கும் அமைப்பு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பாக இருக்க வேண்டும். வறட்சிக் காலங்களில் பாசனத்திற்காக எவ்வளவு தண்ணீர் திறப்பது? குடிநீருக்காக எவ்வளவு தண்ணீர் திறப்பது? என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரம் இல்லாத அமைப்பை உருவாக்கி காவிரி பிரச்சினையை தொடங்கிய இடத்துக்கே கொண்டு வந்து விடாதீர்கள்’’ என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருந்தார். ஆனால், இப்போது அதை உறுதி செய்யாமல் மத்திய அரசின் முடிவில் தலையிட மாட்டோம் என்பது அதன் கடமையை தட்டிக்கழிக்கும் செயலாகும். இதன்மூலம் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் அநீதிக்கு உச்சநீதிமன்றமும் துணை போயுள்ளது.