/

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைக் கேட்டுப் பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :21 மே 2018, 9:22 pm

குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைக் கேட்டுப் பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நஷ்டத்துக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இந்தச் சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த ஆணையம் அமலுக்கு வரும்.
தற்போதுள்ள நிலையில் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பதும், அப்படியே கூடினாலும் மத்திய அரசு இந்த ஆணையத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்மொழியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும்.
எனவே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன், தேவைப்பட்டால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.