பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று: அரசு செய்ய வேண்டியது என்ன?
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.


திருநெல்வேலி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளதால், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பயன்படுத்த தகுந்த பொருள்களை தேர்வு செய்து, அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக, மலிவானதாகவும், மிக எளிதாக கிடைப்பதாகவும், கொண்டு செல்வதற்கு நாகரிகமாகவும் உள்ள மாற்றுப் பொருள்களை தட்டுப்பாடு இன்றி போதிய அளவு உற்பத்தி செய்து, விரைவில் சந்தைப்படுத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமாகும்.
அந்த வகையில், எளிதில் மக்கும் தன்மை கொண்டதும், மறு சுழற்சிக்கு பயன்படுத்த தகுந்ததுமான காகிதம் மற்றும் துணிப்பைகள், சணல் பைகள், பனை ஓலையால் செய்யப்பட்ட பொருள்கள், பனை நார் மற்றும் வாழை நாரால் செய்யப்பட்ட பொருள்கள், தேங்காய் சிரட்டைகள், பாக்குமட்டைகள், இலைகள், கண்ணாடி குவளை, கண்ணாடி பாட்டில்கள், அலுமினியப் பொருள்கள், கரும்புக் கழிவுகளால் தயாரிக்கப்படும் தட்டுகள், மண் பாண்ட பொருள்கள் போன்றவற்றை, பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பயன்படுத்துவதற்கு மக்களை தயார்படுத்திவிட்டால், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு படிப்படியாக குறைந்து முற்றிலுமாக நிறுத்திவிடலாம். அதோடு, கள்ளச் சந்தையில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்வதை தடுக்க, அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கரும்புச் சக்கை, சோளத்தட்டை ஆகியவற்றின் கழிவுப் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் தட்டு, கரண்டி, டம்ளர், கப், தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் டீ கப், அகப்பை உள்ளிட்ட பொருள்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
நகரப் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என வித விதமான பைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாகவும், இனி தேவை அதிகம் இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள், மகளிருக்கு தொழில் வாய்ப்பு: பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படும் போது மாநிலம் முழுவதும் மாற்றுப் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும். தற்போதே எல்லா விழாக்களிலும் பேப்பர் கப், பிளேட், விருந்துக் கூடங்களில் உள்ள மேஜைகளில் விரிக்கும் நீண்ட காகித ரோல் எல்லாம் அவசியத் தேவையாக உள்ளது. இதை வீட்டில் இருந்தே சிறுதொழிலாகவும் செய்யலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும்.
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ஜவுளிக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடை உள்ளிட்ட இடங்களில் நேரடியாகவே விற்பனை செய்யலாம். டைனிங் ரோல் பேப்பர், கப் மற்றும் பிளேட்டுகளில் மணமக்களின் பெயர்களை அச்சடித்துக் கொடுத்தல் போன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
எனவே, இளைஞர்கள், மகளிர் குழுக்கள், புதிய தொழில் முனைவோர் காகிதம் மற்றும் துணிப் பைகள் உற்பத்தியை தொடங்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். துணிப்பை தயாரிப்பை வீட்டிலிருந்தே செய்யலாம். நல்ல தரம், குறைவான லாப நோக்கு, நேரடி அணுகுமுறை இருந்தால் இந்தத் தொழிலில் வேகமாக முன்னேறலாம்.
இதுகுறித்து திருநெல்வேலி தொகுதி முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு கூறியது: தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். பீடி சுற்றும் தொழில் தற்போது மந்தமான நிலையில் உள்ளதால், ஏராளமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளன. பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு, காகிதம், துணிப்பை தயாரித்தல் உள்ளிட்ட, பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையிலான கைவினைப் பொருள்களை தயாரிக்க பயிற்சி அளித்தால், விரைவிலேயே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் தேவையான அளவுக்கு தயாராகிவிடும். ஏற்றுமதியும் செய்யலாம். இதன் மூலம் பீடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெருகும் என்றார் அவர்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தி.ரமேஷ் கூறியது:
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக உள்ள கைவினைப் பொருள்களை தயாரிப்பதை அரசு ஊக்குவிப்பதோடு, அதை அரசே கொள்முதலும் செய்து கொள்ளும் வகையில், தொழிற்பேட்டைகளை அமைத்து கிராமப் புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...