சிமென்ட் ஆலையில் எரிபொருளாகும் பிளாஸ்டிக் கழிவுகள்: அச்சத்தில் மக்கள்

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளில் எரியூட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு ஏற்படுவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிமென்ட் ஆலையில் எரிபொருளாகும் பிளாஸ்டிக் கழிவுகள்: அச்சத்தில் மக்கள்
Updated on
2 min read

அரியலூர்: அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளில் எரியூட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு ஏற்படுவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கனிம வளங்கள் நிறைந்த  அரியலூர் மாவட்டத்தில் ஒரு அரசு, 8 தனியார் சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் சிமென்ட் உள்நாட்டு தேவை மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதன் மூலம் அந்நியச் செலவாணி கிடைத்து வருகிறது. 

சில ஆண்டுகளாக அதிக அளவில் கனிமங்கள் எடுக்கப்படுவதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெடிவைத்து கனிமங்கள் எடுக்கப்படுவதால் சுரங்கத்தைச் சுற்றியுள்ள வீடுகள் சேதமடைவதோடு, இரவு வேளைகளில் தூக்கங்கெட்டு மக்கள் அவதிக்குள்ளாகிருகின்றனர்.

மேலும், அரசு சிமென்ட் ஆலையில் வெளியேற்றப்படும் புகையால் பள்ளக்காவேரி உள்ளிட்ட கிராம மக்கள் மூச்சுக்கூட விட முடியாமல் அவதிப்படுகின்றனர். ஏற்கெனவே இங்குள்ள சிமென்ட் ஆலைகளால் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோயால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது தனியார் சிமென்ட் ஆலைகள் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை எரிப்பதால்  சுற்றுச்சூழல் மாசுபடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ரெட்டிபாளையம், தாமரைக்குளம், பள்ளக்காவேரி கிராம மக்கள் கூறியது: 

அரசு சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகையால் அவதிப்பட்டு வரும் சூழலில், தற்போது ரெட்டிப்பாளையம், தாமரைக்குளம், ஓட்டக்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் சிமென்ட் ஆலைகள் சில மாதங்களாக பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்ட தொழிற்சாலைகளில் இருந்து இரவு வேளைகளில் அதிக அளவில் புகை வெளியேறுகிறது. வீட்டில் இருந்து வெளியே வந்தால் தலைக்கு மேலே புகைமூட்டம் சுற்றுகிறது. விடிந்ததும் பார்த்தால் சாம்பல் புழுதி வீடுகளில் படிந்திருக்கும். ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கரித்துகள்கள் மிதக்கின்றன. இரவு நேரத்தில் வெளியே போனால் தோல் வறண்டு எரிச்சல் ஏற்படுகிறது.

ஏற்கெனவே சிமென்ட் ஆலைகளால் விவசாயத்தை இழந்துவிட்டோம். இந்த பிளாஸ்டிக் புகை என்னவெல்லாம் பிரச்னையைக் கொண்டு வருமோ என்று பயமாக இருக்கிறது என்கின்றனர்.

அரியலூரைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா: சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் மோசமான விளைவையே ஏற்படுத்தும். திருச்சி மாநகராட்சி, அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம் நகராட்சிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆகியவற்றுடன் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளைப் பயன்படுத்திக் கொள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன.

இந்த ஒப்பந்தம் மூலம் அந்த இடங்களில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தொல்லைகள் ஒழிந்து போகும். ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலைகளில் எரிப்பதென்பது மிகப்பெரிய அழிவுத் திட்டம் என்றார் அவர்.

இதுகுறித்து தனியார் சிமென்ட் ஆலையின் சுற்றுச்சூழல் பொறியாளரிடம் கேட்டபோது, 2016-ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்திருக்கும் வரைமுறைகளுக்கு உட்பட்டே பிளாஸ்டிக் கழிவுகள் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடத்தில் எரிப்பதற்கும், சிமென்ட் தொழிற்சாலையில் பாதுகாப்பான முறையில் எரிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்கு பிளாஸ்டிக் மட்டும் தனியாக எரிக்கப்படுவதில்லை. நிலக்கரியுடன் மிகக் குறைந்த விகிதத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்த்து எரிக்கிறோம்.

 2016-ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்திருக்கும் வரைமுறைகளுக்கு உட்பட்டே பிளாஸ்டிக் கழிவுகள் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின்படி சிமென்ட் தொழிற்சாலையானது சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நகராட்சிகளில் ஒப்பந்தம் செய்து கழிவுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு. 

பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு சிமென்ட் தொழிற்சாலையில் எரிபொருளாகப் பயன்படுத்துவதே மிகச் சிறந்த தீர்வு என்றார்.

இதுகுறித்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ரெங்கசாமியிடம் கேட்டபோது: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நடைமுறைகளில் பாதுகாப்பானது சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப்  பயன்படுத்துவது மட்டுமே. 

இதில், சுமார் 1,500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரியும்போது, பிளாஸ்டிக் துகள்கள் அனைத்தும் தமது மூலக்கூறு வடிவத்தை இழந்து சாம்பலாகி விடுகின்றன. இந்தச் சாம்பலால் எந்தப்  பிரச்னையும் ஏற்படாது. இவை சிமென்ட்டுடன் கலந்துவிடும். ஆனால், எரிக்கும்போது வெளிப்படும் நச்சுப்புகையின்  அளவைக் கண்காணிக்க வேண்டும். நிலத்தில் தேங்கிக் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குச்  சரியான தீர்வு இதுதான். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

இந்த நடைமுறையால் தொழிற்சாலைகளுக்கும் எரிபொருள் செலவு குறையும். இதில் அரசு, தொழிற்சாலை என இரு தரப்புக்குமே நன்மை உண்டு. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு  வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் நச்சுப் புகையை அதிக அளவில் வெளியிட்டால், மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com