'என் ஜெயில் அனுபவம் உன் வயசு': மதுரை மத்திய சிறை பெண் எஸ்.பிக்கு வாட்ஸ் அப் மூலம் ரவுடி கொலை மிரட்டல் 

மதுரை மத்திய சிறை பெண் எஸ்.பிக்கு ரவுடி ஒருவன் வாட்ஸ் அப் மூலம்  கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
'என் ஜெயில் அனுபவம் உன் வயசு': மதுரை மத்திய சிறை பெண் எஸ்.பிக்கு வாட்ஸ் அப் மூலம் ரவுடி கொலை மிரட்டல் 
Published on
Updated on
1 min read

மதுரை: மதுரை மத்திய சிறை பெண் எஸ்.பிக்கு ரவுடி ஒருவன் வாட்ஸ் அப் மூலம்  கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் 'புல்லட்' நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006-ல் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல்நிலையின் காரணமாக இவர் தூக்க மாத்திரைகளை அதிகம் கேட்டு சாப்பிட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடந்த வாரம் சிறையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்த பெண் மருத்துவரிடம் தனக்கு அதிக தூக்க மாத்திரைகள் தரும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த மருத்துவர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர் மருத்துவரை தாக்க முற்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில்,  மதுரை மத்திய சிறை எஸ்பியான ஊர்மிளா, சிறை கமாண்டோக்களை அனுப்பி அவரை அடித்து உதைத்தாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு  நன்னடத்தை விதியின் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்தவர்  தனது தம்பி புல்லட் நாகராஜனிடம் இந்த விஷயம் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜன், மதுரை மத்திய சிறை எஸ்பியான ஊர்மிளா மற்றும் குறிப்பிட்ட மருத்துவருக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயிலே கிடையாது. இனிமே புதுசா கட்டினாத்தான் உண்டு மதுரை ஜெயிலைப் பொறுத்த வரை உனக்கு நிர்வாகத் திறமையே கிடையாது. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா...? உன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கா?

உன்ன விட பெரிய ஆபிசர எல்லாம் நான் பாத்துருக்கேன். நீயெல்லாம் டி.என்.பி.எஸ்.சி எழுதி நேத்து வந்தவ. என் ஜெயில் அனுபவம் உன் வயசு.  ஆனா யாரா இருந்தாலும் ஜெயில் கேட்ட விட்டு வெளிய வந்துதானே ஆகணும். நான் ஒன்னும் பண மாட்டேன். ஆனா பசங்க ஏதாச்சும் பண்ணுனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல. பொம்பளையாக இருக்கீங்க, திருந்துங்க.

இவ்வாறு அவர் அந்த மிரட்டல் ஆடியோவில் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய எஸ்பி ஊர்மிளா, "குறிப்பிட்ட ரவுடி நாகராஜை நான் பார்த்தது கூட இல்லை; இந்த மிரட்டல் ஆடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கவுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பெண் எஸ்பிக்கு ரவுடி ஒருவன் விடுத்துள்ள மிரட்டல் ஆடியோ சமூக வலைத்தளங்களால்  வைரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com