சாகர்மாலா திட்டத்தால் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறையும்: பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சாகர்மாலா திட்டத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்துக்கான செலவு கணிசமான அளவில் குறையும்
கையேட்டை வெளியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். உடன் கிருஷ்ணாபட்டணம் துறைமுக தலைமை செயல் அதிகாரி அனில் எந்துரி,
கையேட்டை வெளியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். உடன் கிருஷ்ணாபட்டணம் துறைமுக தலைமை செயல் அதிகாரி அனில் எந்துரி,


மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சாகர்மாலா திட்டத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்துக்கான செலவு கணிசமான அளவில் குறையும் என்று மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் சென்னை கிண்டியில் பொருளாதார வளர்ச்சியில் துறைமுகத்தின் பங்கு என்ற தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து, கையேட்டை வெளியிட்டு அமைச்சர் பேசியது:
சர்வதேச தரத்துக்கு இணையாக நம் நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவது, புதிய துறைமுகங்களை அமைப்பது, சாலை, ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தை இணைத்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது, இதற்காக துறைமுகங்களை விரிவாக்கம் செய்வது போன்ற முக்கிய நோக்கங்களுக்காக சாகர்மாலா திட்டத்தை ரூ.8.57 லட்சம் கோடி செலவில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. 
இதுவரை ரூ.4.25 லட்சம் கோடி செலவு: இதுவரை இத்திட்டத்தின் கீழ் 490 பணிகளுக்கு ரூ.4.25 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இன்னும் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான செலவினம் கணிசமான அளவில் குறையும். மேலும் நிலையான, பாதுகாப்பான முறையில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் கடலோரப் பொருளாதார மண்டலங்கள்: நிகழ்ச்சியில் பங்கேற்ற கப்பல்துறை இணைச் செயலர் கைலாஷ் குமார் அகர்வால் பேசியது: சாகர்மாலா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 14 கடலோரப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.
அமைச்சர் பேட்டி: நிகழ்ச்சியை அடுத்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது: சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் புதிய துறைமுகம் அமைக்க அறிவிக்கப்பட்டு கன்னியாகுமரி, இணையம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும். மேலும் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் குறித்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் 10 நாள்களில் நடைபெற உள்ளது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் பி.ரவீந்திரன், கிருஷ்ணாபட்டணம் துறைமுக தலைமை செயல் அதிகாரி அனில் எந்துரி, சிஐஐ தென் மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com