இந்துக்களை விமர்சித்து பேசியதாக திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசியதாக இந்து மக்கள் கட்சி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் திரைப்பட இயக்குநரும்,
இந்துக்களை விமர்சித்து பேசியதாக திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசியதாக இந்து மக்கள் கட்சி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை, விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை, வடபழனி பிரசாத் லேப்பில் கடந்த நவ.22-ஆம் தேதி நடைபெற்ற "விசிறி' என்ற திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, திருப்பதி உண்டியலில் காணிக்கை செலுத்துவதை சாமிக்கு அளிக்கப்படும் லஞ்சம் என்றும், கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதால் தேர்வில் வெற்றிபெற முடியாது. படித்தால்தான் வெற்றிபெற முடியும் என்றும் அவர் பேசியிருந்தார்.
 எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தப் பேச்சு இந்து மதத்தினரின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் அமைப்பாளர் நாராயணன் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 இப்புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததை அடுத்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் நாராயணனின் புகாரில் முகாந்திரம் இருந்தால் விசாரித்து வழக்குப் பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்நோக்கத்துடன் பேசியதாக இந்திய தண்டனைச் சட்டம் 295-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com