திமுக என்றுமே ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தது இல்லை: ஸ்டாலின் பேச்சு

திமுக என்றுமே ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தது இல்லை என்று அரக்கோணத்தில் நடந்த  தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக என்றுமே ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தது இல்லை: ஸ்டாலின் பேச்சு
Published on
Updated on
5 min read

அரக்கோணம்: திமுக என்றுமே ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தது இல்லை என்று அரக்கோணத்தில் நடந்த  தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திங்களன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அரக்கோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:

வருகின்ற 18 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியின் நாடாளுமன்ற தேர்தலிற்கு போட்டியிடக்கூடிய  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டாக்டர். ஜெகத்ரட்சகன் அவர்கள். அவரைப் பற்றி நான் உங்களுக்கு அதிகமாக விளம்பரப்படுத்தி சொல்லவேண்டிய அவசியமில்லை, காரணம் அவரை அறிந்தவர்கள் நீங்கள். அதேபோல், உங்கள் எல்லோரையும் புரிந்தவர் அவர்.

10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெங்களூர் நடை பாதை திட்டம் வந்தது. ஜெகத்ரட்சகன் அவர்கள் மத்திய அரசில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இவருடைய பெரும் முயற்சியின் காரணத்தால், நெசவாளர்களுக்கு தடையில்லா "மும்முனை மின்சாரம்" வழங்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர். அதுமட்டுமல்ல அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டிருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான திருக்கோவில்களை தன்னுடைய சொந்த செலவில் சீரமைக்க உதவி செய்தவர் நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்கள்.

இவருக்கு இன்னொரு ஸ்பெஷாலிட்டி உண்டு, இவர் பெரிய ஆன்மீகவாதி, சிலர் இன்றைக்கும் தி.மு.க-வைப் பற்றி விமர்சனம் செய்கின்றார்கள். இந்துக்களுக்கு தி.மு.க எதிரி - எதிரி என்று. ஜெகத்ரட்சகனை பார்த்த பிறகுமா அதை நீங்கள் சொல்கின்றீர்கள்? அண்ணா என்ன சொன்னார், "ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்றுதான் சொன்னார்கள். நாங்கள் என்றைக்கும் ஆண்டவனுக்கு, ஆண்டவனை வணங்கக் கூடியவர்களுக்கு நாங்கள் எதிராக இருந்தது இல்லை.

கலைஞர் அடிக்கடிச் சொல்வார்கள், "நாங்கள் ஆண்டவனை ஏற்றுக்கொண்டு இருக்கிறோமோ இல்லையோ எங்களை ஆண்டவன் ஏற்றுக்கொண்டு இருக்கின்றார். அது போதும் எங்களுக்கு" என்று பல நேரங்களில் சொல்லி இருக்கின்றார்கள். இது இப்போதல்ல 1953ல் நான் பிறந்த நேரத்தில், வெளியிடப்பட்ட பராசக்தி திரைப்படம். இன்றைக்கும் நீங்கள் தொலைக்காட்சிகளில் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதன் முதலில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானது அந்தத் திரைப்படத்தின் மூலமாக தான். அதில் ஒரு வசனம் வரும், கோயில்கள் கூடாதென்பதல்ல கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. இங்கு நம்முடைய வேட்பாளர் ஓட்டு கேட்கின்ற பொழுது என்னுடைய துணைவியாரை சொல்லி ஒரு சொல்லைச் சொன்னார். என் துணைவியார் என்றைக்கும் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறார், ஒருநாள் தவறுவதில்லை நான் தடுக்கின்றேனா? என்றைக்காவது போகக்கூடாது என்று நான் சொல்லி இருக்கின்றேனா? அது அவருடைய விருப்பம். வேண்டுமென்று திட்டமிட்டு, ஏதோ, இந்துக்கள் கோவிலுக்குச் செல்வதை தடை செய்கின்றது தி.மு.க, இந்துக்களுக்கு விரோதியாக இருக்கின்றது தி.மு.க என்று பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். அதையெல்லாம் நாட்டு மக்கள் நிச்சயமாக நம்புவதற்கு தயாராக இல்லை. நான் கழகத் தலைவராக பொறுப்பேற்றதும், நான் பொதுக்குழுவில் பேசுகின்ற பொழுது என்ன சொன்னேன் என்றால், எல்லா மதத்தினருக்கும் நான் பாதுகாவலனாக இருப்பேன் எங்களுடைய கட்சி துணை நிற்கும் சாதி மத பேதம் பார்க்க மாட்டோம், எந்த மதத்தினருக்கும் தி.மு.க எதிரானது அல்ல என்று அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கின்றேன்.

அதேபோல், இந்த சோளிங்கர் தொகுதியின் சட்டமன்றத்திற்கு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் அசோகன் அவர்கள், உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றார். ஆகவே, நாடாளுமன்ற வேட்பாளருக்கும், சட்டமன்ற வேட்பாளருக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஜெகதரட்சகன் அவர்களை எதிர்த்து ஒரு வேட்பாளர் நிற்கின்றார். எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பா.ம.க விற்கும் தி.மு.க-விற்கும் தான் போட்டி. அ.தி.மு.க-வின் கூட்டணியோடு நிற்கின்றது பா.ம.க. எனவே, அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் கூட்டணி சேர்ந்ததால் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம், ஆச்சரியப்பட வேண்டாம், அது ஒரு பெரிய அதிசயம் இல்லை. ஏற்கனவே, சென்னையில் கோவையில் பெங்களூரில் நடந்த பேரத்தின் அடிப்படையில் தான் இப்பொழுது பெரிய ஐயாவும் சின்ன ஐயாவும், இன்றைக்கு அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்துள்ளார்கள். டாக்டர் ராமதாஸ் அவர்களைப் பொறுத்தவரையில் எந்த கொள்கையும் அவருக்கு கிடையாது. இது ஏதோ எங்களுக்கு மட்டுமல்ல மற்றக் கட்சிகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கு மட்டுமல்ல பா.ம.க-வில் இருக்கக்கூடிய உண்மையான தொண்டர்களுக்குக் கூட அது நன்றாகத் தெரியும்.

தமிழக சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு, படம் வைக்கக்கூடாது என்று சொன்னவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், அதுமட்டுமல்ல அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது அதனால் யாருக்கு என்ன பயன்? அவர் நாட்டிற்கு ஏதாவது நன்மை செய்து இருக்கின்றார்களா? வரலாற்றில் பதிவாகி இருக்கின்றார்களா? அவருக்கு என்று என்ன பெயர் இருக்கின்றது? புகழ் இருக்கின்றது? அதனால், அந்த அம்மையாருக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடிய காரணத்தினால். வரக்கூடிய சந்ததியினர் என்ன தெரிந்து கொள்ளப்போகின்றார்கள்? எனவே இது தேவையற்றது என்று, சொன்னவர் யாரென்று கேட்டீர்களென்றால் டாக்டர் ராமதாஸ் அவர்கள். அதுமட்டுமல்ல அ.தி.மு.க அரசு என்பது மோடியின் பினாமி அரசாக இருக்கின்றது. மத்திய அரசிற்கு இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க அரசு கூனிக்குறுகி அடிமையாக இருக்கின்றது, பயப்படுகிறது என்று சொன்னவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் இருந்த பல்வேறு சொத்துக்கள் அனைத்தையும் தனது குடும்ப சொத்துக்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ் அவர்கள். இந்தப் புகார் இதைப் பற்றிய விபரங்கள் விளக்கங்கள் அத்துனையும் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கின்றது. குறிப்பாக திருச்செந்தூர், தென்காசி, குற்றாலம், விருத்தாசலம், சிதம்பரம், சென்னை ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய வன்னியர்களுக்கு உரிய அந்த சொத்துக்கள் அத்துனையும், நான் பகிரங்கமாக சொல்லுகின்றேன்! அவருடைய துணைவியார் பெயருக்கு மாற்றி வைத்திருக்கின்றார் என்பதுதான் உண்மை.

எனவே, தமிழக அரசு நினைத்தால் அதை எல்லாம் கைப்பற்றி விட முடியும். இதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இன்றைக்கு அவர்கள் இந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்றார்கள். அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யக்கூடியவர்.

"நாற்பதும் நமதே நாடும் நமதே" அதுதான் இன்றைக்கு தி.மு.க-விற்கு இருக்கக்கூடிய நிலை, அதை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். இதில் இன்னொரு பியூட்டி என்னவென்று கேட்டால் அவர் சொல்லித்தான் எனக்கு துணை முதலமைச்சர் பதவியே கிடைத்ததாம். பெரிய ஐயா சொல்லி இருக்கின்றார், ஐயா! பெரிய ஐயா! எனக்காக நீங்கள் பரிந்துரை செய்ததற்காக ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு தகுதி இருக்கின்றது என்ற அடிப்படையில் தானே பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன் வருத்தப்படவில்லை.

ஆனால், பா.ம.க-வை முதன்முதலில் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி வைத்த தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். மறந்து விட்டீர்களா? மாநிலங்களவை உறுப்பினராக இருந்த உங்கள் மகன் சின்ன ஐயா அன்புமணி ராமதாஸ், அமைச்சராக சென்று உட்கார்ந்தாரே எப்படி? மத்தியில் அமைச்சரவையில் கூட இடம் கிடைக்கவில்லை. அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அவர்களும், அன்னை சோனியா காந்தி அவர்களும் நிச்சயமாக கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். கோபித்துக்கொண்டு அன்றைக்கு டெல்லியில் இருந்து கிளம்பி விட்டீர்களே, ஐயா! பெரிய ஐயா! மறந்து விட்டீர்களா? அப்பொழுது தலைவர் கலைஞர் அவர்கள் உங்களது கைகளைப் பிடித்து உட்கார வைத்து கவலைப்படாதீர்கள், மத்திய அமைச்சராக உங்கள் பையனை கொண்டு வந்து உட்கார வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று சொல்லி, அதன்பிறகு மன்மோகன் சிங் அவர்களிடத்திலும், அன்னை சோனியா காந்தி அவர்கள் இடத்திலும் வாதாடி, போராடி அதன்பிறகு மருத்துவத்துறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மத்திய அமைச்சர் பொறுப்பில் உட்கார வைத்த பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு, தி.மு.கழகத்திற்கு உண்டு.

29-04-2013 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் டாக்டர் ராமதாஸ் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து விட்டு. என்ன காரணம் அவரை எதற்காக கைது செய்தோம், என்பதை சட்டமன்றத்தில் விளக்கமாக படித்தார், பா.ம.க வன்முறையை தூண்டக்கூடிய வகையில், வன்முறையை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய வகையில், கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது என்று பகிரங்கமாக முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சொல்லவில்லையா?

ஐந்து வருடமாக எந்தப் பிரச்னையும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நம்முடைய பொருளாளர் துரைமுருகன் அவர்கள் வீட்டிற்கு வந்து உள்ளீர்கள், அவரது மகன் நடத்தக்கூடிய கல்லூரிக்குச் சென்று இருக்கின்றீர்கள், அவர் இன்றைக்கு வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக நம் கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கின்றார். கட்சியில் இருக்கக்கூடிய முன்னணித் தலைவர்களில் ஒருவர் பொருளாளராக இருக்கக்கூடிய துரைமுருகன் அவர்கள். அவர் மீது தவறு இருந்தால் தண்டிக்கட்டும் கண்டிக்கட்டும், எந்த நீதிமன்றத்திற்கும் நான் வர தயார் என்று அவரே சொல்லியிருக்கிறார். நாங்கள் பனங்காட்டு நரி சலசலப்புக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம் என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்றார்.

ஆனால், என்ன நடக்கின்றது இப்பொழுது, எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக இன்கம்டாக்ஸை பயன்படுத்துகின்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை காண்டிராக்டர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து எடுத்து இருக்கின்றார்கள். எடுத்ததற்குப் பிறகு அமைதியாக போய்விட்டீர்கள். அதைப்பற்றி ஏதாவது விளக்கம் சொல்லி இருக்கின்றீர்களா? நடவடிக்கை எடுத்து இருக்கின்றீர்களா? அவர்களை அழைத்து ஏதாவது விசாரணை செய்து இருக்கின்றீர்களா? இல்லை, ஏனென்றால் அவர் இன்றைக்கு அமைச்சர்களில் ஒருவராக இருக்கக்கூடிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர்.

அவருக்குத்தான் உள்ளாட்சித்துறையைப் பொறுத்தவரையில் எல்லா காண்ட்ராக்ட்களும், வேலுமணி அவர்கள் மூலமாக சபேசனுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ரெய்டு விவரம் குறித்து இன்னும் வெளிவரவில்லை, துரைமுருகன் வீட்டில் ரெய்டு செய்கின்றீர்கள், இது நியாயமா என்று தேர்தல் ஆணையரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபொழுது, போலீசாரிடம் இருந்து புகார் வந்தது, ஆகவே, அந்த அடிப்படையில் தேர்தல் கமிஷன் மூலமாக நடவடிக்கை எடுக்கின்றோம் என்று சொல்கின்றீர்கள்.

நான் சொல்கின்றேன் எடப்பாடி வீட்டில் எவ்வளவு தொகை கோடி கோடியாக பணம் வைத்திருக்கின்றார். ரெய்டு செய்யுங்கள் என்று நான் சொன்னால் நடவடிக்கை எடுப்பீர்களா? அமைச்சர்கள் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருக்கின்றார்கள், அவர்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் இருக்கின்றது, பினாமி வீட்டில் இருக்கின்றது என்று நான் புகார் எழுதிக் கொடுத்தால் இந்த வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்குமா? காரணம், வருமான வரித்துறை என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதை இன்றைக்கு பிரதமர் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்.

காரணம், இன்றைக்கு தமிழ்நாட்டில் பி.ஜே.பி காலூன்ற வாய்ப்பே இல்லை, எப்படி அ.தி.மு.க-வைப் பயப்படுத்தி மிரட்டி அச்சுறுத்தி சி.பி.ஐ ரெய்டு, புலனாய்வுத் துறை சோதனை மூலம் அடிபணிய வைத்தார்களோ, அதேபோல் நம்மையும் அடிபணிய வைக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க எதிர்க்கும் வசிய மாட்டேன் என்கிறது. இது மசியாது, இது பனங்காட்டு நரி - இது மசியாது.

இப்படி ஒரு குறுக்கு வழியில் மிரட்டி அச்சுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிபணிய வைக்கலாம் என்றால் இது அறிஞர் அண்ணா அவர்களால் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய கழகம் இந்த திராவிட முன்னேற்றக் கழகம்.

அவர்களால் வளர்க்கப்பட்டு இருக்கக்கூடியவர்கள் நாங்கள். தடாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள், பொடாவை பார்த்தவர்கள், போடா உங்களுடைய சட்டம் எங்களை என்ன செய்யப் போகின்றது? மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com