பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தலைவர் பிரபாகரன் விரும்பி சந்தித்த இயக்குநர் மகேந்திரன்: சீமான் புகழாரம் 

தலைவர் பிரபாகரன் விரும்பி சந்தித்து உரையாடி மகிழ்ந்த இயக்குநர் மகேந்திரன் என்று நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
Updated On :2 ஏப்ரல் 2019, 12:32 pm

DIN

சென்னை: தலைவர் பிரபாகரன் விரும்பி சந்தித்து உரையாடி மகிழ்ந்த இயக்குநர் மகேந்திரன் என்று நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடகப் பாணியிலான  திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து.

புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது. காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குனர் மகேந்திரன் ஒரு மாமேதை. கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.

தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர் . சிறந்த எழுத்தாளர்.

அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.

தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.