தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வயது என்ன?:ஆச்சர்யத் தகவலை வெளியிட்ட மத்திய அரசு 

தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வயது தொடர்பான ஆச்சர்யத் தகவலை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Published On :31 ஜனவரி 2024, 1:04 pm IST

மதுரை: தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வயது தொடர்பான ஆச்சர்யத் தகவலை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும்,  தூத்துக்குடி, சிவகளை, பரம்பு பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரியும் அவர் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்குரைஞர், தமிழகத்தை மத்திய தொல்லியல் துறை புறக்கணிக்கிறது. குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அகழாய்வுப் பணிக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும், இதுவரை அகழாய்வு குறித்த  அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக, நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர் சத்தியமூர்த்திக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சத்தியமூர்த்திக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருள்களின் வயதை கண்டறியும் கார்பன் டேட்டிங் சோதனைக்காக அவற்றை புளோரிடாவுக்கு அனுப்பவில்லை. இவற்றைப் பார்க்கும்போது தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருப்பதுபோல் தெரிகிறது. வெளிநாடுகளில் அகழாய்வு நடத்தப்பட்டு பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அந்த நாடு தூக்கி வைத்து கொண்டாடும். அந்தப் பகுதியைப் பாதுகாக்கும். ஆனால், மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையைப் பார்க்கும்போது, தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என்றார்.

மத்திய அரசு வழக்குரைஞர் இதுகுறித்து பதில் அளிக்கையில், அகழாய்வு மேற்கொள்வதில் மத்திய அரசு எவ்வித பாகுபாடும்  பார்க்கவில்லை. இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின் தமிழக உயர்அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை பிப். 18ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.அப்போது ஆஜராகிய தமிழக உயர்அதிகாரி  இதுகுறித்து விரைவில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறி அவகாசம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வயது தொடர்பான ஆச்சர்யத் தகவலை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,மத்திய தொல்லியல் துறையின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 'ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு 'கார்பன் டேட்டிங்' எனப்படும் முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், ஒரு பொருளில் வயது கிமு 905 என்றும், இன்னொன்றின் வயது கி.மு 791 என்றும் கண்டறியப்பட்டுள்ளது.' என்று தெரிவித்தார். 

அதேசமயம் இதுகுறித்த விரிவான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவையென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக தொல்லியல் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூலம் சிவகளை பகுதியில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 காலத்தைச் சேர்ந்தவை என்று  தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, 'தற்போது கண்டறியப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவில் தமிழ் உலகில் மிகவும் தொன்மையான மொழி என்பது தெரிய வருகிறது. இந்த கார்பன் டேட்டிங் முறையில் ஆதிச்சநல்லூரில் மீதமுள்ள இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்படுமா? ' என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வழக்கினை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.