

தமிழகத்தைக் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைப் பார்த்தாலே புயல் சின்னங்களுக்கு பிடிக்கவில்லை போலும். நம்மை தீண்டத்தகாதவர்களாக நினைக்கின்றன இந்த புயல் சின்னங்கள்.
புயலே உருவாகவில்லை, உருவாகி எங்கேயோ போய்விட்டது என்றால் பரவாயில்லை. காற்றழுத்தத் தாழ்வு நிலையாக இருக்கும் போது நேராக சென்னையைக் குறி வைக்கும். ஆனால் புயலாக வலுப்பெற்று கொம்பு முலைத்துவிட்டால் போதும் சென்னையைக் கண்டும்காணாமல் போய்விடும்.
கடந்த 2018ம் ஆண்டு சென்னைக்கு பொய்த்துப் போன பருவமழையால் ஒரு துரதிருஷ்டமான ஆண்டாகவே போனது இதுபோன்ற தரமான சம்பவங்களால்தான். ஆம் உருவான அனைத்து புயல்களும் சென்னையை நோக்கி வருவதாகக் கூறிவிட்டு பிறகு வேறு வேறு திசைகளில் சென்று அண்டை மாநிலங்களை, மாவட்டங்களைத் தாக்கி அழித்தன.
2016ம் ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு தமிழகத்தை வேறு எந்த புயலும் தாக்கவில்லை. புயல் தாக்கவில்லை என்று வருத்தத்தோடு கூறுகிறோமோ என்று நினைக்கவேண்டாம். புயல் வராதததால் மழையும் இல்லாமல் போனதால்தான் அந்த வருத்தம். வேறு ஒன்றும் இல்லை.
கடந்த 2018ம் ஆண்டு இதேப்போன்ற ஒரு மே மாதத்தில் அரபிக் கடலில் உருவான சாகர் புயல் தமிழகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தாலும் தென் மாவட்டங்களையும், கேரளா, கோவா, மகாராஷ்டிர மாநிலங்களை மிரட்டிவிட்டுச் சென்றது. இதை நாம் எந்த வகையிலும் குற்றம்சொல்ல முடியாது. நம் நேரம் அப்படி.
அதே சமயம் சாகர் புயல் வந்தபோதும், தமிழகத்துக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அது என்னவென்றால், இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கருர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.
சரி அடுத்த புயலுக்கு வருவோம்..
அதன்பிறகு நவம்பர் மாதம் 10ம் தேதி உருவானது கஜா புயல். இது நேராக சென்னைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேதாரண்யம் அருகே கரையைக் கடந்து அதனை சுற்றியிருந்த கிராமங்களை சின்னாபின்னமாக்கிச் சென்றது. இந்த புயல் வங்கக் கடலில் இருக்கும் போது வட்டமெல்லாம் அடித்து சென்னைக்கு வருவேன் என்று சபதமெல்லாம் செய்தது. ஆனால் கொஞ்சமும் கருணை காட்டாமல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்து சென்னைவாசிகளின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டது. (ஏமாறச் சொன்னது நானோ.. என் மீது கோபந்தானோ.. பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.)
மிகக் கோரந்தாண்டவம் ஆடிய கஜா புயலால், விளை நிலங்கள் பலத்த சேதம் அடைந்தன. இது சென்னையைக் கடந்திருந்தால் அவ்வளவு சேதம் இருந்திருக்காதோ என்று கூட பலரும் நினைத்தார்கள்.
அடுத்த நம்ம பேத்தைதான்..
2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவாகி முதலில் வட தமிழகம் - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புயல், வட இந்தியா நோக்கி நகர ஆரம்பித்ததால், தமிழகத்துக்கு புயல் வாய்ப்பு தகர்ந்தது. அதனால், தமிழகத்துக்கான மழை வாய்ப்பும் பறிபோனது.
இப்படித்தான் கடந்த ஆண்டு முழுக்க புயல் சின்னங்கள் உருவாவதும், சென்னை நோக்கி வருவதும், பிறகு பாதையை மாற்றிக் கொண்டு டாடா காட்டுவதுமாகவே இருந்துவிட்டது. இதனால் தமிழகத்துக்கு போதிய மழை இல்லாமல், பூமி காய்ந்து போனது.
இந்த நிலையில், 2019ம் ஆண்டு அதே கோடை காலம், அதே போன்றதொரு மே மாதத்தில் வங்கக் கடலில் உருவான ஃபானி புயலும் ஆரம்பத்தில் சென்னையை நோக்கி நகர்ந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் பாதையை மாற்றி போக்குக் காட்டி வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இது தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கே 1125 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது 24 மணி நேரத்தில் தொடர்ந்து வலுப்பெற்று தீவிரப் புயலாக மாறும்.
வட மேற்கு நோக்கி நகர்ந்து 30ம் தேதி மாலை வட தமிழகம் - தெற்கு ஆந்திரா அருகே நகரக் கூடும். தற்போதைய நிலவரப்படி கரையைக் கடப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளது. 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் ஃபானி புயல் சென்னையை நெருங்கவும் வாய்ப்பு குறைவு. அதே சமயம், கரையைக் கடக்கவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
ஒரு வேளை புயல் கரையைக் கடந்தால் சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில்தான் அது நிகழும். திசை மாறும் காரணத்தால் ஃபானி புயல் வலு குறைய வாய்ப்பு உள்ளது.
ஃபானி புயல் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்குத்தான் வாய்ப்பு உள்ளது. ஃபானி புயல் வேகமாக வலுப்பெற்று வடமேற்காக நகர்கிறது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி தெரிய வருவது என்னவென்றால், 2018ம் ஆண்டு எப்படி புயல் சின்னம் ஏமாற்றம் காட்டியதோ, அப்படியே தான் இந்த ஆண்டும் தொடங்கியுள்ளது. அதுவும் நாளைக்குள் ஓரளவுக்கு இறுதியாகிவிடும்.
பார்க்கலாம்.. மாற்றமா? அல்லது ஏமாற்றமா? என்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.