நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரம்: வனத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள் தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக வனத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

உடுமலைப்பேட்டை அருகே மடத்துக்குளத்தில் வாழைத் தோட்டத்தில் புகுந்து கம்பீரமாக  நடைபோடும் சின்னத்தம்பி யானை.

Updated On :14 பிப்ரவரி 2019, 12:59 am IST


யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள் தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக வனத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, எஸ்.கே. கெளல், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரிசார்ட் உரிமையாளர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம், நாகமுத்து உள்ளிட்டோர் ஆஜராகி, ரிசார்ட்கள், கட்டடங்கள் பல ஆண்டுகளாக உள்ளன. 
மேலும் யானைகள் வழித்தடம் எனவும், வனப் பகுதி எனவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழக அரசு அறிவித்தது. எனவே, தற்போது அந்தக் கட்டடங்களை சட்டவிரோதம், விதிமீறி கட்டப்பட்டது என அறிவிப்பது ஏற்புடையதல்ல என்றனர்.
இதைத் தொடர்ந்து, மனுதாரர்களில் ஒருவரான யானை ராஜேந்திரன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், முதலில் 27 கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியும் குடியிருப்பு என்ற பெயரில் வழங்கப்பட்டது. குடியிருப்புகள் மாற்றப்பட்டு 39 ரிசார்ட்கள் உள்ளன.
 இவை அனைத்தும் சட்டவிரோதமாக ரிசார்ட்டாக மாற்றப்பட்டவையாகும். மேலும், யானைகளைப் பாதுகாக்க அவற்றின் வழித்தடம் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் உள்ள கட்டடங்களில் பெரும்பாலானவை விதி மீறி கட்டப்பட்டவை என்பதால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார். 
இதைத் தொடர்ந்து, ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், யானை வழித்தடத்தில் பல ரிசார்ட்கள், கட்டடங்கள் அமைந்திருக்கவில்லை. 
இருப்பினும், அவை சீல் வைக்கப்பட்டுள்ளன. எனவே, யானை வழித்தடத்தில் இல்லாத ரிசார்ட்களுக்கும், கட்டடங்களுக்கும் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றனர்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இடைக்கால மனுக்கள் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக வனத் துறைக்கும், நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டனர்.
பின்னணி: நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2011-இல் தடை விதித்தது. 
மேலும், யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
 இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
இந்த வழக்கு, நாடு முழுவதும் உள்ள யானை வழித்தடங்களில் கட்டுமானப் பணிக்கு தடை கோரி, ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள சில ரிசார்ட்களுக்கு சீல் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.