தமிழகத்தில் விவசாயத் தொழிலுக்கு துணை தொழிலாக பால் உற்பத்தியாளர்கள் கிராமப்புறங்களில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 25 லட்சம் குடும்பங்கள் கூட்டுறவுத் துறைக்கு நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறார்கள். அமைப்பு சார்ந்து செயல்படுகிறவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்கிற தமிழக ஆட்சியாளர்கள், அமைப்பு சாரா முறையில் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் பால் உற்பத்தி செய்கிற தொழிலை செய்பவர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலிப்பதில்லை. விவசாய தொழிலுக்கு அடுத்தபடியாக கடுமையாக உழைக்கிற தொழிலாக பால் உற்பத்தியாளர்கள் விளங்குகிறார்கள். நாள்தோறும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 35 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களது இடுபொருளான மாட்டுத் தீவனம், கலப்புத் தீவனம் 15 முதல் 20 சதவீதம் விலை ஏறி இருக்கிறது. ஆனால் இந்த விலை ஏற்றத்திற்கு ஈடாக பால் உற்பத்தியாளர்களுக்கு விலை கொடுக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.