/

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவகாரம்: வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக மதிமுக பொதுச்

Updated On :26 பிப்ரவரி 2019, 1:49 am IST


சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழக ஆளுநர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாகக் கூறி பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரை விடுவிக்க வலியுறுத்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமானோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வைகோ மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை முடித்த போலீஸார்,   எழும்பூர் நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு  குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோசலின்துரை முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வைகோ விடம், குற்றப்பத்திரிகை நகல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கை வரும் மார்ச் 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த  வைகோ கூறியதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் 7 தமிழர்களுக்காக மதிமுகவைப் போல வேறு எந்தக் கட்சியும் போராட்டம் நடத்தியது கிடையாது. இந்த நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி, ஒரு அமைப்பினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் மதிமுக கலந்து கொள்ளாது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.