காணாமல்போன சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் ரெ.முகிலன் (52). சூழலியல் செயல்பாட்டாளர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை, சென்னையில் கடந்த 15-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
பின்னர் அவர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அதன் பின்னர் முகிலனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அதே வேளையில் முகிலன், மதுரையும் செல்லவில்லை. மேலும் அவரது செல்லிடப் பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். மேலும், மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முகிலனை மீட்டுத் தருமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்: இந்நிலையில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையிலும், முகிலனை மீட்கும் வகையிலும் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து எழும்பூர் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் வழக்கின் ஆவணங்களை, சிபிசிஐடி அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








