வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சாலையோரம் தூங்கும்போது கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்த காஞ்சிபுரம் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலைய போலீஸாருக்கு உயர்நீதிமன்றம்

Updated On :15 ஜனவரி 2019, 1:43 am IST


சாலையோரம் தூங்கும்போது கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்த காஞ்சிபுரம் மாவட்டம், அணைக்கட்டு காவல் நிலைய போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மானாமதி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன்-காளியம்மாள். இவர்களது 3 வயது மகள் ஹரிணி. இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, காஞ்சிபுரம் பழஞ்சூர் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் வெங்கடேசன் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு கண்விழித்து பார்த்தபோது, கொசு வலை அறுக்கப்பட்டு குழந்தை ஹரிணி காணாமல் போனது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அணைக்கட்டு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குழந்தையைக் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். 
இந்த நிலையில் ஆள்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞர் பிரதாப், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால், சங்கீதாவும் அவரது உறவினர்களும் சேர்ந்து குழந்தையைக் கடத்தியுள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக சங்கீதா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அணைக்கட்டு காவல் நிலைய ஆய்வாளர் நாகலிங்கம், உதவி ஆய்வாளர்கள் பிரேம் குமார், சங்கர் உள்ளிட்ட தனிப்படை போலீஸார் தீவிர தேடலுக்குப் பின்னர் குழந்தை ஹரிணியை கண்டுபிடித்தனர் என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தேவஅருள் பிரகாசும் போலீஸாரை பாராட்டி கருத்து தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏழையின் குழந்தையை பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே தேடி கண்டுபிடித்த போலீஸாரை பாராட்டுவதாக தெரிவித்ததுடன் ஆள்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.