தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை மற்றும் சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியின்போது வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காவல் துறையில் காவலர், தலைமைக் காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் ஆயுதப் படையில் ஹவில்தார் நிலைகளில் பணிபுரியும் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல் நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலைவார்டர்கள் 60 பணியாளர்களுக்கும் தமிழக முதல்வரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படியாக தலா ரூ.400 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
இவர்கள் அனைவருக்கும் காவல் துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை இயக்குநர் மற்றும் சிறைத்துறை தலைவரால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடத்தப்படும் அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.
மேலும் 1500 பதக்கமாக வழங்கப்பட்டு வந்த காவலர் பதக்கம் இந்த ஆண்டு முதல் 3000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும்காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்றப் பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்தப் பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூ.4 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூ.6 ஆயிரமும், காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் பதக்கங்களை வழங்குவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









