/

கஜா புயலால் களையிழந்த பொங்கல் விழா

கிராமங்களில் தீபாவளியைவிட விமரிசையாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிகழாண்டு களையிழந்து காணப்படுகிறது.

News image

பட்டுக்கோட்டை கடைவீதியில் திங்கள்கிழமை மிகக் குறைவாகக் காணப்பட்ட மக்கள் நடமாட்டம்.

Updated On :15 ஜனவரி 2019, 1:46 am IST


கிராமங்களில் தீபாவளியைவிட விமரிசையாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிகழாண்டு களையிழந்து காணப்படுகிறது.
டெல்டா மாவட்ட கிராமங்களில் பொங்கல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். பெரும்பாலான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பொங்கலையொட்டி 3 நாட்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று மகிழ்ச்சியாகக் கொண்டுடாடுவது வழக்கம்.
ஆனால், கஜா புயல் பாதிப்பு காரணமாக பல கிராமங்களில் மக்கள் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர். குறிப்பாக, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு வட்டங்களில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், புயல் தாக்குதலில் வீட்டை இழந்தவர்கள் ஏராளம். நிவாரணம் கிடைத்தாலும்கூட, இன்னும் பழைய நிலைமையை எட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொங்கல் விழாவில் காணப்படும் வழக்கமான உற்சாகம் நிகழாண்டு இல்லை.
பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட வட்டங்களில் பொங்கல் திருநாளுக்கு முந்தைய சில நாட்களில் உடன் பிறந்தவர்களுக்கு வெகு விமரிசையாக பொங்கல் சீர் வரிசை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். மாட்டு வண்டிகளில் அல்லது மினி வேனில் 2 அல்லது 3 கட்டுக் கரும்புகள், நான்கைந்து வாழைத் தார்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும், வாங்கிச் சென்று கொடுப்பர். ஆனால், நிகழாண்டு அந்த உற்சாகம் இல்லை. பொருளாதார பிரச்னை காரணமாக, சீர் வரிசை கொடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 
அரசுத் தரப்பில் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்காத விவசாயிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. கிடைத்த விவசாயிகளுக்கும் பண நெருக்கடியால் செலவு செய்ய முடியாத நிலையில் தவிக்கின்றனர். என்றாலும், சீர் செய்யும் பழக்கம் நின்றுவிடக்கூடாது என்பதற்காகப் பலர் அரைக்கட்டு அல்லது சில்லறையில் கரும்புகளையும், வாழைப் பழ சீப்புகளையும் வாங்கிச் சென்று கொடுத்து வருகின்றனர். 
பொங்கல் சீர் வரிசை வாங்குவதற்காக பட்டுக்கோட்டை கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். பொங்கலுக்கு முந்தைய 4 நாட்களில் இரு சக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத அளவுக்குக் கூட்ட நெரிசல் மிகுந்திருக்கும். ஆனால், நிகழாண்டு பட்டுக்கோட்டை கடைவீதிகளில் சாதாரண நாட்களில் காணப்படும் கூட்டம்தான் திங்கள்கிழமையும் இருந்தது. காய்கனி சந்தையில் கூட்டம் இருந்தாலும், ஜவுளி கடைகளில் கூட்டம் இல்லை.
இதேபோல, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்குக் கிராம மக்களிடம் வசூல் செய்வது வழக்கம். இப்போது, யாரிடமும் பண வசதி இல்லாததால், வசூல் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்குக் கூட சிரமப்படுகிறோம் என்றனர் கிராம இளைஞர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்தது:
அடித்தட்டு மக்கள் அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பரிசுத் தொகை மூலம் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்குப் படிப்படியாக நிவாரணம் கிடைத்து வருகிறது. ஆனால், வாழ்வாதாரத்தை இழந்த அவர்களால், இன்னும் அத்துயரத்திலிருந்து மீளமுடியவில்லை. நிவாரணம் கிடைத்தவர்களுக்கும் வாழ்வாதார பிரச்னை தொடர்வதால், அவர்களாலும் பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாட முடியவில்லை. எனவே, வழக்கமாக வாங்கப்படும் கரும்பு, வாழை உள்ளிட்ட பொங்கல் பொருள்களை மிகக் குறைவான அளவுக்கே வாங்கி வருகின்றனர். இதனால், பொங்கல் விழாவில் காணப்படும் வழக்கமான உற்சாகம் நிகழாண்டு இல்லை என்றார் நடராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.