எனவே அ.தி.மு.க ஆட்சியில் 2011 முதல் 2016 வரை 21,988 கோடி ரூபாயும், 2017 முதல் 2019 வரை 15,838 கோடி ரூபாயும், மொத்தம் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த 16-06-2019 அன்று அவரை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றார். அந்த பேட்டிகள் எல்லாம் செய்திகளில் வந்திருக்கின்றது அதற்கான ஆதாரம் எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றது. ஆனால் போரூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே நீங்கள் அறிவித்த 620 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கக்கூடிய திட்டம் கிடப்பில் இருக்கின்றது. என்ன நிலையில் இருக்கின்றது என்பதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் புதிய மெகா கூட்டு குடிநீர் திட்டங்கள் எதுவும் நடைபெறுவதாக எங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை. எனவே, குடிமராமத்து பணியும் தோல்வியடைந்து, குடிநீர் திட்டப் பணிகளும் தோல்வியடைந்து இன்றைக்கு தமிழகம் தண்ணீர் இல்லாத நிலையில் பஞ்சத்தில் தவித்து கொண்டிருக்கின்றது.