நேற்றைய தினம் நீங்கள் ஒரு செய்தியை பார்த்திருப்பீர்கள், புதுவை மாநிலத்தில் இருக்கக்கூடிய கிரண் பேடி என்ற ஆளுநர் அந்த மாநிலத்தில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை குறித்து கருத்து சொல்லுகின்ற பொழுது, ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.கவை விமர்சிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்களையும் விமர்சிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களையும் கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி விமர்சித்திருக்கின்றார். நம்முடைய ஆளுநராக இருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அவர், வேறு மாநிலத்தின் ஆளுநர். உடனடியாக சட்டமன்றத்தில் எழுந்து கேட்டேன் “எங்களை மட்டுமல்ல ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய உங்களையும் சேர்த்து தான் அந்த ஆளுநர் கேவலப்படுத்தி இருக்கின்றார். அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சித்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன் ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தி பேசி இருக்கின்றார் என்றால் அதனை அனுமதிக்கலாமா’ என்று கேட்டேன். வாய் திறக்கவில்லை, இந்தப் பேச்சை எல்லாம் அவையில் பேசக்கூடாது என்று, அவைக்குறிப்பிலிருந்து என் பேச்சை நீக்கினார்களே தவிர வேறல்ல. நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் குரல் எழுப்பி அதற்கு சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், நான் அதற்கு வருத்தப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன். ஆளுநரிடத்திலிருந்து மன்னிப்பு என்ற அந்த வார்த்தையை நான் கடிதம் மூலமாக பெற்றிருக்கின்றேன் என்று வரலாறு படைத்திருக்கின்றோமே இதைவிட வேறு என்ன வேண்டும். நம்முடைய மானத்தைக் காப்பாற்றி இருக்கின்றோம்.