தேசத் துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: தீர்ப்பை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் கோரியும் வைகோ மனு தாக்கல்

தேசத் துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.
தேசத் துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: தீர்ப்பை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் கோரியும் வைகோ மனு தாக்கல்


சென்னை: தேசத் துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், தேசத் துரோக வழக்கில் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் வைகோ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், அவர் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வைகோவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ம் ஆண்டு தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், தண்டைன பெற்ற வைகோ, சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை ரூ.10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் உடனே கட்டினார் வைகோ.

இந்த வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒருமாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு நான் குற்றம் சாட்டுகிறேன் என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக் கூறியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீஸார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசுத் தரப்பில் காவல் ஆய்வாளர் மோகன் உள்பட 9 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்களிடம் வைகோ தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்தார். அரசுத் தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் வைகோவிடம் விசாரணை செய்யப்பட்டது. அந்த விசாரணையின்போது, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்று பதில் அளித்தார் வைகோ.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இந்த வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜரானார். வைகோ தரப்பில் மூத்த வழக்குரைஞர் தேவதாஸ் ஆஜராகி வாதாடினார். அரசுத் தரப்பு மற்றும் வைகோ தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com