ஊர் குளங்களை தூர் வாருங்கள்: மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு கே.எஸ். அழகிரி வேண்டுகோள் 

உங்கள் ஊர் குளங்களை தூர் வாருங்கள் என்று 72 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊர் குளங்களை தூர் வாருங்கள்: மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு கே.எஸ். அழகிரி வேண்டுகோள் 

சென்னை: உங்கள் ஊர் குளங்களை தூர் வாருங்கள் என்று 72 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சத்தில் தமிழக மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் வழங்குகிற திட்டங்களை நிறைவேற்றாத காரணத்தால் இன்றைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் தொலைநோக்கு பார்வையோடு நிதி ஒதுக்கி, திட்டங்களை தீட்டி, தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த வகையில் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதிலிருந்து அ.தி.மு.க. அரசு முழு தோல்வி அடைந்து விட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்க விரும்புகிற காங்கிரஸ் இத்தகைய குற்றச்சாட்டுக்களை எழுப்புவதோடு நின்றுவிடாமல், ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ள விரும்புகிறது.

இந்நிலையில், சமீபத்தில் திருவள்;ர் மாவட்டம், தேவந்தவாக்கம் கிராமத்தில் உள்ள சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத நிலையில் இருந்தது. இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் ரூபாய் 10 லட்சம் செலவில் தூர் வாரும் பணி திட்டமிடப்பட்டு, அதை தொடங்கி வைக்கிற நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட இந்தப் பணிக்கு அந்தப் பகுதி மக்களிடையே அமோக வரவேற்பு இருந்ததைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு தமிழக அளவில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு 72 மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் மாவட்டத்தில் ஏதாவது ஒரு குளத்தை தேர்வு செய்து தூர் வாருகிற பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒருநாளில் தூர் வாரும் பணியை சிறப்பாக நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பணிகளை செய்வதன் மூலமாக அரசியல் கட்சி என்பது  ஆக்கப்பூர்வமான சேவை மனப்பான்மையோடு செயல்பட முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் முழுஅளவு ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com