10% இடஒதுக்கீட்டினால் சமூக நீதிக்கு பங்கம் என்பது விஷமப் பிரசாரம்: தமிழக பாஜக  

பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டினால் சமூக நீதிக்கு பங்கம் என்பது விஷமப் பிரசாரம் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
10% இடஒதுக்கீட்டினால் சமூக நீதிக்கு பங்கம் என்பது விஷமப் பிரசாரம்: தமிழக பாஜக  
Published on
Updated on
2 min read

சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டினால் சமூக நீதிக்கு பங்கம் என்பது விஷமப் பிரசாரம் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .

உயர் சாதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தால் போதும், வேலைக்கு தகுதியாகி  விடுவார்கள் எஸ்.சி, எஸ்.டி யை விட குறைவான மதிப்பெண் பெற்றாலே  அவரக்ளுக்கு வேலை கிடைத்து விடும் என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

சமீபத்தில் சட்டமாக்கப்பட்ட 10 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய பணிக்கான தேர்வில்  எஸ்.சி பிரிவினருக்கு குறைந்த பட்சமாக நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பெண்கள் (Cut-off) 61.25 , எஸ் டி பிரிவினருக்கு 53.75,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 61.25 ஆகவும், பொது பிரிவினருக்கு 61.25 ஆகவும், பொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (உயர் சாதி அல்ல) 28.5 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

என்ன,ஏதுவென்ற தெரியாத அரை வேக்காட்டு சமூக ஆர்வலர்களும் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்வது முட்டாள்தனமானது. தற்போதைய  சட்டப்படி, மொத்தம் உள்ளதில் 10 விழுக்காடு பொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். அதனடிப்படையில், தற்போது 421 இடங்களுக்கு 42 இடங்களை இந்த ஒதுக்கீட்டில் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீட்டின் படி  69 விழுக்காடு அந்தந்த பிரிவினருக்கு முறையே  கொடுக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார இட ஒதுக்கீட்டில் அதிகளவு நபர்கள் விண்ணப்பிக்காததையடுத்து, குறைந்த பட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது போட்டி, குறைந்த அளவு இருந்தால் குறைவாகவும், அதிக அளவு இருந்தால் அதிகமாகவும் இருக்கும் என்பது நியதி. சமீபத்தில் தான் இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பதால் தங்களின் சாதி சான்றிதழில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் என்பதை ஆவணப்படுத்தாத முடியாமல் போனது மற்றும் 8 லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் (Creamy Layer) என்பதற்கான ஆதாரங்களை பதிவு செய்வதற்கான நேரமின்மை ஆகிய காரணங்களால் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருக்காது என்பதே கண்கூடு. அதாவது  42 இடங்களுக்கு வெறும் சில நூறு பேர் மட்டும் விண்ணப்பம் செய்திருந்தால் குறைந்த பட்ச மதிப்பெண்களே 'கட்-ஆஃப்' ஆக இருக்கும். அதே இனி வரும் காலங்களில் பல ஆயிரக்கணக்கில் விண்ணப்பிக்கும் போது 'கட்-ஆஃப்' மதிப்பெண் உயரும்.

இந்த சாதாரண விவரம் கூட தெரியாமல்,  பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டினால், சமூக நீதிக்கு பங்கம் என்ற விஷம பிரச்சாரத்தை முன்வைக்க இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர் எதிர்க்கட்சியினர். தொடர்ந்து தவறான தகவல்களின், போலி தரவுகளின் அடிப்படையில், பாஜக அரசு குறித்த விமர்சனங்களை முன் வைத்து மக்களின் மனங்களில் வன்மத்தை வளர்க்க துடிப்பது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மையை மக்களிடத்தில் எடுத்து சொல்லி சந்தற்பவாதிகளின்  பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com