கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் பழனிச்சாமி அரசு: டிடிவி தினகரன் காட்டம் 

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் மக்கள் விரோத பழனிச்சாமி அரசு என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.   
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் பழனிச்சாமி அரசு: டிடிவி தினகரன் காட்டம் 
Published on
Updated on
1 min read

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் மக்கள் விரோத பழனிச்சாமி அரசு என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.   

இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்படும் நிதியை பழனிச்சாமி அரசு திடீரென பெருமளவு குறைத்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. உடனடியாக இம்முடிவைத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) அந்தந்த பகுதிகளில் வசிக்கும் வசதி வாய்ப்பற்ற மாணவ – மாணவியருக்கு 25 % இடங்கள் இலவசமாக ஒதுக்கித் தரப்படுகின்றன. தமிழ்நாட்டில்  இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கான கட்டணத்தை அரசின் பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்குச் செலுத்தி வருகிறது.

தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கான நிதியை அரசு திடீரென பாதிக்கு மேல் குறைத்து அறிவித்திருக்கிறது. உதாரணத்திற்கு முதல் வகுப்புக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான ரூ.25,385/-, தற்போது ரூ.11,719/- ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. பழனிச்சாமி அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட தனியார் பள்ளிகள் மீதி கட்டணத்தைக் கேட்டு பெற்றோர்களை நெருக்கத் தொடங்கியிருக்கின்றன.

வசதி இல்லை என்கிற காரணத்தினால்தானே அவர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்  பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அதனை உணராமல், ‘எடுத்தோம்; கவிழ்த்தோம்’ என்று அரசு நடந்து கொண்டால், அவர்களால் எப்படி கட்டணத் தொகையைச் செலுத்த இயலும்? இதனால் அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா?

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் இந்த முடிவினை மக்கள் விரோத பழனிச்சாமி அரசு  உடனடியாக கைவிட்டு, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வசதியற்ற மாணவர்கள் கட்டணம் எதையும் செலுத்தாமல் தனியார் பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com