ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகைகளுக்கு மிரட்டலா? 

ரஃபேல் ஊழலில் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுவதா என்று மார்க்சிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துளார்.
ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகைகளுக்கு மிரட்டலா? 
Published on
Updated on
2 min read

சென்னை: ரஃபேல் ஊழலில் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகைகளுக்கு மிரட்டல் விடுவதா என்று மார்க்சிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு ரூ. 58 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனிடையே இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்க வேண்டுமெனவும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த தவறான ஆவணங்கள் அடிப்படையில் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து சந்தேகம் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது.

ரஃபேல் விமானத்தின் விலை மற்றும் கொள்முதல் நடைமுறை தொடர்பாக மத்திய அரசு உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளது எனவும், அதனடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும், இந்து பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய ஆவணங்கள் அடிப்படையில் முறையாக விசாரிக்க வேண்டுமெனவும், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா. சமூக ஆர்வலர் பிரசாந்த் பூசன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

முன்னதாக, இந்து பத்திரிகையில் தொடர்ந்து ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த ஆவணங்களின் மூலம் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியுலகத்திற்கு தெரிய வந்ததுடன், ராணுவ பேரத்தில் நடந்த பெரும் ஊழல் நாடு முழுவதும் அம்பலப்படுத்தப்பட்டது. நரேந்திர மோடி மீதும், மத்திய அரசு மீதும் அடுக்கடுக்கான கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன. இன்று (06.03.2019) உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அரசு விசாரித்து வருவதாகவும், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு திருடப்பட்ட ஆவணங்களை  வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கினையும் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வேணுகோபால் கோரியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்துள்ள இந்த வாதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள உண்மை விபரங்களுக்கு பதில் சொல்லுவதற்கு மாறாக  ஆவணங்கள் திருடப்பட்டதாகவும், அதை வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவது அராஜகமானதாகும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் திருடப்பட்டவை எனக் கூறுவதன் மூலம் அவைகள் உண்மையான ஆவணங்கள் என ஏற்றுக் கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே ஆவணங்களின் அடிப்படையில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு நரேந்திர மோடியும், மத்திய அரசுமே பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு குறித்த விசயத்தில் நடைபெற்றுள்ள இம்முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்து தன்னை குற்ற நடைமுறைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே நேர்மையான செயலாகும். பாதுகாப்புத்துறையில் உள்ள ஆவணங்கள் திருடுபோயுள்ளதாக தெரிவித்துள்ளதன் மூலம் மோடி அரசு இப்பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறது என்பதே உண்மை.

ஆனால் இதற்கு நேர் மாறாக, நாட்டின் நலன் கருதி நடத்தப்பட்டுள்ள ஊழல், முறைகேடுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்த பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவது பத்திரிகை சுதந்திரத்தின் மீது விடப்படும் தாக்குதலாகும். உண்மையில் இத்தகைய முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது தேசபக்த பணியாகும். பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வண்மையாக கண்டிப்பதுடன்,  இந்திய நாட்டு மக்கள் ஒரு போதும் மத்திய அரசின் நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com