அரசியல் தலைவர்கள் கல்லூரிகளில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுவது நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கல்லூரி சங்க தொடக்க விழா, ஆண்டு விழா, தமிழ்ப் பேரவை விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரசியல் தலைவர்கள் உரை நிகழ்த்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் சங்கத்தின் அழைப்பை ஏற்று திரு. ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்று அவர்களோடு கலந்துரையாடியது நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. திரு. ராகுல்காந்தி அவர்கள் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு மிக அற்புதமாக பதிலுரை வழங்கியது ஊடகங்கள் மூலமாக வெளிவந்ததை ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பி பார்த்திருக்கிறார்கள், மகிழ்ந்திருக்கிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கிற அ.தி.மு.க. அரசின் மூலமாக நிகழ்ச்சி நடத்திய ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிர்வாகத்தின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.