காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கும் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்த பட்ச ஊதிய உறுதித்திட்டத்தை அமல்படுத்துவோம்” என்ற காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார வரவேற்கிறேன். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஐந்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் ஏழைகளின் வாழ்வாதாரம்தான் முதலில் பறிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி சட்டம் போன்றவற்றால் பல லட்சக்கணக்கான சிறு தொழில்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன. வேலை வாய்ப்பின்மை 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டு விட்டதாக அதிகார பூர்வமான ஆய்வு முடிவுகளே வெளிப்படுத்தின.