எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான முதல்வர் அறிவிப்பில் அதிமுக தோழமை கட்சிகளின் நிலைப்பாடு என்ன?: கம்யூ., கேள்வி

எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்பில் அதிமுக தோழமைக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான முதல்வர் அறிவிப்பில் அதிமுக தோழமை கட்சிகளின் நிலைப்பாடு என்ன?: கம்யூ., கேள்வி

சென்னை: எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்பில் அதிமுக தோழமைக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சேலம் -சென்னை எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவோம் என தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சேலம் - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிரு~;ணகிரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலை தேவை இல்லை என தொடர்ந்து போராடினார்கள்.

போராடிய விவசாயிகளை அரசு மிகக் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்து, அவர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு அபகரித்து கருங்கற்களை ஊன்றியது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது தவறானது. கையகப் படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடியும் வரை மௌனம் காத்த முதலமைச்சர் தற்போது எட்டுவழிச்சாலை உறுதியாகப் போடப்படும் என அறிவித்திருப்பது, தேர்தல் முடிந்துவிட்டது இனி யார் தயவும் தனக்கு தேவை இல்லை என்ற அகங்காரத்தோடு இருப்பதை வெளிப்படுத்துகின்றது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அரசே, மக்களுக்கு எதிராக செயல்பட முனைந்திருப்பது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை உணர வேண்டும்.

முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து, அதிமுகவின் தோழமை கட்சிகளின் நிலைபாடு என்ன என்பதனை வெளிப்படுத்திட வேண்டும்.

மீண்டும் சாலை அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும், அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன், சேலம்- சென்னை எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com