மக்களவைத் தேர்தலில் எனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. தேர்தல் முறைகேடுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, தேனி மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என அத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
தேனி மக்களவைத் தொகுதியில் எனது தோல்வி உருவாக்கப்பட்ட ஒன்று. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம். வாராணசியில் பிரதமர் மோடியை ஓ.பி.எஸ். சந்தித்ததால்தான் அவருடைய மகன் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது மோடிக்கு இல்லாத பாசம், ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தின் மீது மட்டும் வந்தது எப்படி எனத் தெரியவில்லை.
தேனியில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தொகுதியில் பண மழை பொழியவில்லை. மாறாக பணம் சுனாமியாகக் கொட்டியது. மேலும், திடீரென தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
எனவே, பண பலம், அதிகார பலத்தால் உருவாக்கப்பட்டதே எனது தோல்வி. இந்த முறைகேடுகளுக்கு மேலும் சில ஆதாரங்கள் கிடைக்கப் பெற உள்ளன. அனைத்து ஆதாரங்களும் கிடைத்த பின்னர், இதுகுறித்து வழக்குரைஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ரவீந்திரநாத் குமார் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும். ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும்.
கூட்டணி அமையாததே தோல்விக்குக் காரணம்: தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக அமைந்ததுபோல, வட மாநிலங்களில் கூட்டணி அமையாததே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம். லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்திதான் தலைவர். கட்சியில் ஒருசில தலைவர்கள் சரியில்லை என்ற காரணத்தால், ராகுல் காந்தியின் செல்வாக்கு குறைந்துவிடாது. காங்கிரஸ் என்றால், அது நேரு குடும்பம்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றார் இளங்கோவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








