மதுரையில் இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் கடந்த 2014-இல் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுகவுக்கு, அதை தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களின் முக்கிய அரசியல் களமாக திகழ்கிறது மதுரை. சென்னைக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் அனைத்தும் மதுரைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மதுரையில் தொடங்கப்படும் அரசியல் நகர்வுகள் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. ஆரம்பத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வசம் மதுரை தொகுதி இருந்து வந்தது.
அதனால், பெரும்பாலான மக்களவைத் தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கே மதுரை தொகுதியை ஒதுக்கி வந்துள்ளன. இருப்பினும், மதுரை தொகுதியில் திமுக இதுவரை 1989, 1999, 2009, 2014 ஆகிய 4 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. ஆனால், கடந்த 2009 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், அதிமுக 2004, 2014 தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டதில், கடந்த 2014 இல் ஆர். கோபாலகிருஷ்ணன் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
எனவே, அரசியல் முக்கியத்துவம் கருதி, இந்தத் தேர்தலில் மதுரை தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்க அதிமுக விரும்பவில்லை. தொகுதியில் போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டாலும், அடுத்த கட்டமாக வேட்பாளர் தேர்வு ஆரம்பம் முதலே சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை மத்தியம் ஆகிய இரு தொகுதிகள் தவிர, மற்ற 4 தொகுதிகள் தங்கள் வசம் இருக்கும் நிலையில், எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அதிமுக களம் இறங்கியது.
ஆனால், கட்சியினருக்குள்ளே அவ்வப்போது பூசல்கள் வெடித்துக்கொண்டே இருந்தன. கூட்டணிக் கட்சியினரின் பங்களிப்பும் பெயரளவுக்கே இருந்தது. மேலும், வாக்குச் சேகரிப்பின்போதே அதிமுகவுக்கு சிறுபான்மையினரின் எதிர்ப்பு வெளிப்படையாகவே காட்டப்பட்டது. இருப்பினும், மதுரையில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் செளராஷ்டிர சமூகத்தினர் வாக்குகள் அதை ஈடுகட்டிவிடும் என்ற நம்பிக்கையில் அதிமுக இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை வகித்தது.
6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மதுரை தெற்கு தொகுதியில் மட்டுமே, அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் 51,195 வாக்குகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் 51,618 வாக்குகளும் பெற்றனர். இதில், அதிமுக 423 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்றிருந்தது. அதேநேரம், மதுரை கிழக்கில் 34,400 வாக்குகள், மத்திய தொகுதியில் 31,343, வடக்கில் 28,908, மேற்கில் 26,814 மற்றும் மேலூரில் 14,831 வாக்குகள் அதிகம் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றன.
அமமுகவுக்கு கிடைத்துள்ளது அதிமுகவின் வாக்குகள் என்று கூறும் நிலையில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளில் கணிசமானவை அதிருப்தி காரணமாக அதிமுகவுக்கு கிடைக்காமல் போனவை எனவும் கூறப்படுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் ஒரேயொரு முறை மட்டுமே வென்றுள்ள அதிமுக, இந்த முறை அதை தக்கவைத்து விடமுடியும் என்ற அதீத நம்பிக்கையில் களம் கண்டு தோல்வியைத் தழுவியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









