இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோடியுடன் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

சென்னை: இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, “உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. அவையில் உரையாற்றும்போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை.

தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதைப் பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த  சமஸ்கிருதத்தையும், ஆதிக்க மனப்பான்மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாகச் செயல்பட்டது திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசு.

மத்திய  அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி - சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டதுடன், அவை குறித்து தமிழில் விளம்பரம் வெளியிடும்போதுகூட, இந்தி - சமஸ்கிருத உச்சரிப்பிலேயே, தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

என்ன திட்டம், அதன் பொருள் என்ன என்பதைக்கூட தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு; மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட  வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்த முயற்சியின் முதல்கட்டமாக, அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், அது பிறந்த இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகள் பலவற்றில், ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள உண்மையை, பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பு பற்றி சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் அவர்கள், “இட்லி, தோசை,  வடை, சாம்பார் ஆகியவை சுவையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள், விருந்தோம்பலுக்கு மட்டுமல்ல, நன்றியுணர்வுக்கும் நீண்ட காலமாகவே பெயர் பெற்றவர்கள்.

எனவே பிரதமர் மோடி அவர்கள், இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூர்வமாக முயற்சி செய்து, உண்மையான முறையில் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழர்கள் அவருக்கு என்றென்றம் நன்றி பாராட்டுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com