கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கனஅடி நீர் வீணாகக் கடலில் கலப்பு: அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் - கடலில் கலக்க அனுமதித்து விட்டு, முதல்வர் பழனிசாமி உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதம் என்று கொள்ளிடத்தில் 20,000 கன
கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கனஅடி நீர் வீணாகக் கடலில் கலப்பு: அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
Published on
Updated on
2 min read

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் - கடலில் கலக்க அனுமதித்து விட்டு, முதல்வர் பழனிசாமி உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதம் என்று கொள்ளிடத்தில் 20,000 கன அடி நீர் வீணாக கடலில் கலப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று வெளிநாடுகளில் இரண்டு வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் பேட்டியளித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை.

திமுக ஆட்சியில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்ட  காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தையும் இந்த அ.தி.மு.க. அரசு கைவிட்டுவிட்டது

கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் - இப்படி பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டுப்படவில்லை.

கொள்ளிடம் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஓரிடத்தில் அக்கம் பக்கம் இருக்கும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராத வகையில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. அந்தத் தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித்துறையில் இருக்கிறார்கள்.

ஆனால் அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறையுமில்லை, ஆர்வமும் இல்லை.

பொதுப் பணித் துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கு பொறியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக கிடக்கின்றன என்று செய்திகள் வருகிறது; பிறகு எப்படி பணிகள் நடக்கும்? திறமையான பொறியாளர்கள் இருந்தும் அந்த துறை இன்றைக்கு மேட்டூர் அணையில் நிரம்பும் நீரைக் கூட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் வழங்கிட முடியாமல் தவிக்கிறது.

கோடையிலும், வறட்சியிலும் பாதிப்புக்குள்ளாகி, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு இரவு பகலாக அலைந்த தாய்மார்கள் இன்று காவிரி நீர் கடலில் கலப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல், உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் - கடலில் கலக்க அனுமதித்து விட்டு, இஸ்ரேல் போகிறேன்  என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட எடப்பாடி பழனிசாமி முன்வந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com