கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே செயல்பட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Published on
Updated on
1 min read

சென்னை: கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழர்கள் நகரக் கட்டமைப்புடனும், நாகரீக வாழ்வியலுடன் வாழ்ந்ததை உலகிற்குப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்விற்குரியப் பொருட்களை வைத்திடும் அருங்காட்சியகம் அமைத்திட மத்திய அரசை தமிழக அரசு எதிர்நோக்கியிருப்பது தேவையற்றதாகும். இது கீழடி ஆய்வு முடிவுகளை உலகிற்கு அறியத்தருவதில் மேலும் தாமதப்படுத்துமே ஒழிய, எந்தவொரு ஆக்கப்பூர்வப் பணிகளுக்கும் உதவாது என்பது வெளிப்படையானது.

கீழடி ஆய்விற்குத் தொடக்கம் முதலே முட்டுக்கட்டை போட்டு முதல் இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை வெளியிடாமலும், ஆய்வுக்குரிய வசதிகளைச் செய்துதராமலும், சரிவர ஆய்வுசெய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்துமென கீழடி ஆய்வு முடிவுகளை மூடி மறைக்கும் நயவஞ்சகச் செயலை செய்து வரும் மத்திய அரசு ஒருபோதும் கீழடி நாகரீகத்தை வெளிக்கொணர்ந்து உலகிற்குத் தமிழர்களின் தொன்மத்தை அறியத் தருவதை ஒருநாளும் விரும்பாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

கீழடியின் 110 ஏக்கரும் முழுமையாகத் தொல்லியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகிறபோது அது ஒட்டுமொத்த உலகையே தமிழர்கள் பக்கம் திருப்பும் வரலாற்றுப் பெருமிதத்தைத் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களை ஆவணப்படுத்துவதற்காகத் தமிழக அரசே தனது பொருட்செலவில் அருங்காட்சியகம் அமைத்திடும் பணியைத் தொடங்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாகத் தனது நிதியினை ஒதுக்கீடு செய்து கீழடி ஆய்வுக்குரிய அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும் எனவும், கீழடி ஆய்வுபொருட்களை பெங்களூர்க்குக் கொண்டு செல்லாது தமிழகத்திலேயே வைத்து ஆவணப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com