
சென்னை: ஒரு பக்கம் ரேஷன் கடைகளில் ரூ.1000 வாங்க கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும் நிலையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, யாருக்கெல்லாம் ரூ.1000 பரிசுத் தொகை கிடைக்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், முன்னுரிமைப் பெறாத (என்பிஎச்எச்) மற்றும் சர்க்கரை மட்டுமே வாங்கும் (என்பிஎச்எச்எஸ்) அட்டைகளுக்கும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படாது. அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறிவிப்பால் தற்போதைக்கு, பல ரேஷன் கடைகளில் ரொக்கப் பணம் கொடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக,
பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பில் அடங்கும். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.258 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அறிவிப்பு: பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜனவரி 7ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆதார் அட்டை அவசியம்
இந்த நிலையில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர், அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்குவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விசாரணையின் போது, எந்த நோக்கத்துக்காக பணக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. கட்சிப் பணம் என்றால் எந்த கேள்வியும் கேட்க மாட்டோம், அரசின் நிதி என்பதால்தான் கேள்வி கேட்கிறோம் அரசின் நிதி என்றால் கேள்வி எழத்தான் செய்யும் என்று நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர்.
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அரசு வழக்குரைஞர் கூறியதற்கு, அரசின் கொள்கை முடிவு தவறாக இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் பதிலடி கொடுத்தனர்.
பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் போய் சேர வேண்டும் என்பதை வகைப்படுத்தியப் பிறகே திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும், வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க தடை விதிப்பதாகவும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை அனைவருக்கும் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகை மற்றும் தொகுப்புகளை வழங்கும் திட்டம் திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடந்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.