ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 குடும்பங்களுக்கு
ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Published on
Updated on
1 min read

ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பில் அடங்கும். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.258 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 ஆளுநர் அறிவிப்பு: பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி ஆயிரம் ரூபாய் அளிப்பதற்கான அரசு உத்தரவும் வெளியிடப்பட்டது.
 திட்டம் துவக்கம்: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதன்பின், ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைக்கவுள்ளனர். இதைத் தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை (ஜன. 7) முதல் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.
 தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 விதிமுறைகள் வெளியீடு: இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆயிரம் ரூபாய் பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பிறகே வழங்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் இல்லாதோர், அவர்களது குடும்பத்தில் பெயர் இருக்கும் நபரின் ஆதார் அட்டையைக் காண்பித்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் அடிப்படையிலோ பரிசுத் தொகுப்பு வழங்கலாம்.
 ஆயிரம் ரூபாயை வெளிப்படையாக வழங்க வேண்டும். வயதானோர், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com