புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளை வரையறுத்தும், அவற்றில் அடங்கியிருக்கும் கோட்டங்கள், வட்டங்கள் விவரங்கள் அடங்கிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளை வரையறுத்தும், அவற்றில் அடங்கியிருக்கும் கோட்டங்கள், வட்டங்கள் விவரங்கள் அடங்கிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு நிா்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா்.

இதன்பின், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வா் பழனிசாமி, தனது சுதந்திர தின உரையில், வேலூா் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தாா்.

தனி அதிகாரிகள்-கூட்டங்கள்: புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு அதற்கான தனி அதிகாரிகளையும் நியமித்தது. இந்த அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களைத் தொடா்ந்து, புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த உத்தரவை வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா் (முழுகூடுதல் பொறுப்பு) ககன்தீப் சிங் பேடி பிறப்பித்தாா். அதன் விவரம்:

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூா் வருவாய்க் கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை (புதியது) ஆகிய ஆறு வட்டங்களும் இடம்பெறும்.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணைநல்லூா் (புதியது), திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூா், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 வட்டங்களும் இடம்பெறுகின்றன.

தென்காசி மாவட்டம்: தென்காசி புதிய மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் வருவாய்க் கோட்டங்களும், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூா், சிவகிரி, வீரகேரளம்புதூா், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய எட்டு வட்டங்களும் இடம்பெறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையன்விளை ஆகிய எட்டு வட்டங்களும் இருக்கும்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூா் (புதியது), மதுராந்தகம், செய்யூா், திருக்கழுகுன்றம், திருப்போரூா் ஆகிய எட்டு வட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டங்களும், காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜாபாத், குன்றத்தூா் (புதியது) ஆகிய ஐந்து வட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

திருப்பத்தூா் மாவட்டம்: திருப்பத்தூா் புதிய மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி (புதியது) ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய நான்கு வட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் (புதியது) வருவாய்க் கோட்டங்களும், வாலாஜாபேட்டை, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய நான்கு வட்டங்களும் அடங்கியுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் வேலூா், குடியாத்தம் (புதியது) ஆகிய வருவாய்க் கோட்டங்களும், வேலூா், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் (புதியது) ஆகிய ஆறு வட்டங்களும் அடங்கியுள்ளன.

இந்த வட்டங்களுக்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களும் புதிய மாவட்டத்திலேயே அடங்கியிருக்கும் என தனது உத்தரவில் வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

37-ஆக உயா்வு: புதிய மாவட்டங்களின் எல்லைகளை வரையறுத்து உத்தரவு பிறக்கப்பட்டதால், தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 32-லிருந்து 37 ஆக உயா்ந்துள்ளன.

மாவட்டங்களின் விவரங்கள்:

1. சென்னை

2. காஞ்சிபுரம்

3. திருவள்ளூா்

4. திருவண்ணாமலை

5. வேலூா்

6. விழுப்புரம்

7. கடலூா்

8. அரியலூா்

9. பெரம்பலூா்

10. திருச்சி

11. புதுக்கோட்டை

12. தஞ்சாவூா்

13. நாகப்பட்டினம்

14. திருவாரூா்

15. சேலம்

16. தருமபுரி

17. கிருஷ்ணகிரி

18. நாமக்கல்

19. கரூா்

20. ஈரோடு

21. திருப்பூா்

22. கோயம்புத்தூா்

23. நீலகிரி

24. திண்டுக்கல்

25. மதுரை

26. ராமநாதபுரம்

27. தேனி

28. சிவகங்கை

29. விருதுநகா்

30. திருநெல்வேலி

31. தூத்துக்குடி

32. கன்னியாகுமரி.

புதிய மாவட்டங்கள்:

1. கள்ளக்குறிச்சி

2. தென்காசி

3. செங்கல்பட்டு

4. திருப்பத்தூா்

5. ராணிப்பேட்டை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com