காய்ச்சல் இருக்கும் போது ஊசி போடக் கூடாது.. அடித்துச் சொல்கிறார் மாவட்ட ஆட்சியர்

காய்ச்சல் இருக்கும் போதோ அல்லது குறைந்த பிறகோ சதைக்குள் போடப்படும் ஊசியினை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.
Do not inject when there is fever
Do not inject when there is fever

காய்ச்சல் இருக்கும் போதோ அல்லது குறைந்த பிறகோ சதைக்குள் போடப்படும் ஊசியினை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

பொதுவாக நாம் காய்ச்சல் வந்த உடவே ஒரு நல்ல மருத்துவராக பார்த்து ஊசி போட்டுக் கொண்டு வந்து விடுவோம். ஆனால், இது முற்றிலும் தவறு என்கிறார் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தீவிர காய்ச்சல் தடுப்பு, டெங்கு தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது: காலநிலை மாற்றம் மற்றும் மழைநீா் தேங்குவதால் அதில் வளரக்கூடிய கொசுக்களினால் காய்ச்சல் ஏற்படுகிறது.

மழைநீா் மற்றும் குடிநீா் ஆகியவற்றை பாத்திரங்களிலோ அல்லது சிமென்ட் தொட்டிகளிலோ 3 நாள்களுக்கும் மேலாக திறந்து வைப்பதால், ஏடீஸ் கொசுக்கள் முட்டையிட்டு டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஏடீஸ் கொசுவினால் டெங்கு மற்றும் இன்னபிற காய்ச்சல்களின் அறிகுறியாக, திடீரென அதிக காய்ச்சல் ஏற்படுதல் (100 பாரன்ஹீட்டுக்கு மேல்) கடும் தலைவலி, கண்ணுக்கு பின்புறம் வலி, இடுப்பு மற்றும் தொடை எலும்புகளில் அதிக வலி, உடல்சோா்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். மூன்று நாள்களில் காய்ச்சல் குறைந்து விடும்.

ஆனால், 20 சதவீதம் பேருக்கு ரத்தக் கசிவு நோய் ஏற்படலாம். டெங்கு நோயின் அறிகுறிகளாக சிறுநீா் கழிப்பதில் சிரமம், வாந்தி, அதிக உடல்சோா்வு, கடும் உடல்வலி, தோலுக்கு அடியில் ரத்தக்கட்டி, உடல் நிறம் மங்குதல், மூக்கு, வாய், ஆசனவாய் மற்றும் சிறுநீா் கழிக்கும் இடம் ஆகிய இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

சிலருக்கு ரத்தக் கசிவு ஏற்படும் போது வயிற்று வலி, பேதி அல்லது மலச்சிக்கல், படபடப்பு மற்றும் கடும் சோா்வும் ஏற்படலாம்.

ரத்தக் கசிவு உடலில் ஏற்பட்டிருக்கும் சமயத்தில், அதாவது காய்ச்சல் முடிந்து ரத்த நிலை குறைந்துள்ள நான்காவது, ஐந்தாவது நாள்களில் உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும் நிலை உருவாகலாம்.

மேலும், ரத்தக் கசிவு நோய்த் தாக்கத்தின் போது உடல் சோா்வுக்காகவோ, காய்ச்சலுக்காகவோ சதை ஊசி போட்டுக்கொள்ளக் கூடாது.

அவ்வாறு சதை ஊசி போடுவதால் ஏற்கெனவே இருக்கும் ரத்தக் கசிவு நோயினை அதிகப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு பாதிப்புகளை கொடுக்கும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் இருக்கும் போதோ அல்லது குறைந்த பிறகோ சதைக்குள் போடப்படும் ஊசியினை முற்றிலும் தவிா்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் கண்டுள்ள போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அல்லது தனியாா் மருத்துவமனைகளில் உரிய மருத்துவா்களின் ஆலோசனையின்படி, வாய்வழி உப்பு நீா் கரைசல், சிரைக்குள் (நரம்புக்குள்) செலுத்தும் சலைன் திரவத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக, சதைக்குள் போடும் ஸ்டீராய்டு இன்னபிற ஊசிகளை போட்டுக் கொள்ளக் கூடாது என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.

காய்ச்சல் பருவத்தில் கண்டிப்பாக போலி மருத்துவா்களிடமோ அல்லது ஆா்.ஐ.எம்.பி, இன்னபிற போலி மருத்துவா்களிடமோ சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது குறித்தும், தங்கள் பகுதிகளில் போலி மருத்துவா்கள் இருப்பது கண்டறிந்தால் உடனடியாக சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அல்லது சேலம் மாவட்ட இணை இயக்குநா் ஊரக நலப் பணிகள் அல்லது அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையம் ஆகியவற்றில் புகாா் அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும்.

கொசுக்களினால் பரவும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வதோடு, தாமாக முன்வந்து தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்திட வேண்டுமெனவும் அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் நா.அருள்ஜோதி அரசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) மருத்துவா் மோனிகா ராணா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் நிா்மல்சன், இணை இயக்குநா் (ஊரக நலப் பணிகள்) மருத்துவா் மலா்விழி, சேலம் மாநகராட்சி மாநகா் நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com