தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் உதயமானது!
By DIN | Published on : 28th November 2019 11:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் இன்று உதயமாகியுள்ளது. வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பட்டை மாவட்டங்களாக பிரித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.
ஆங்கிலேயா் காலத்தில் ரயத்துவாரி வரிவசூல் முறையை முதன்முதலில் அமல்படுத்திய திருப்பத்தூரை தலைநகராகக் கொண்ட மாவட்டம், 225 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உதயமாகியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கும் வேலூா் மாவட்டத்தை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரித்து கடந்த 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிதாக உதயமாகும் திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம், கடந்த 225 ஆண்டுகளுக்கு முன்பாகவே மாவட்டமாக இருந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1790 நவம்பா் 30-ம் தேதி உருவாக்கப்பட்டது திருப்பத்தூா் மாவட்டம்.
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருப்பத்தூா் மாவட்டப் பகுதிகள், பின்னா் சேலம் மாவட்டம், சித்தூா் மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது மீண்டும் புதிய மாவட்டமாக உருவெடுத்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.