தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்? எவ்வளவு நேரமாகும்? அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா? நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா? வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது? காவல்துறையினர் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான். இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 120 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.