சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனா - அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து முதல்வர் செயல்பட வேண்டும்: ஸ்டாலின்

கரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து முதல்வர் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 7:13 am

DIN

கரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து முதல்வர் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இகுதுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கரோனா தனது கோரமுகத்தைத் தமிழகத்திலும் காட்டி, நம் மக்களிடையே சீர்குலைவை ஏற்படுத்திவரும் வரும் நிலையில், தமிழக அரசு அவசரகதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பல தளங்களிலும் பேசப்பட்டுவரும் சில கருத்துக்களை, முதல்வருக்குக் கடிதமாக அனுப்பி இருந்தேன். அதற்குப் பதில் என்ற பெயரில் நீண்ட அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிட்டிருக்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு முதல்வரின் கவனத்திற்குச் செல்லவேண்டும் என்று, நான் அக்கறையுடன் விடுத்த அறிக்கைக்கு அவர் ஆத்திரத்துடன் பதில் தந்துள்ளார். அவரது அண்மைக்கால ஆத்திர குணம் அப்படி!

அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் நான் சித்தரிப்பதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். 'அரசு எதுவும் செய்யவில்லை' என்று நான் சொல்லவில்லை; 'அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க. சார்பில் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவோம்' என்று தான் சொன்னேன். நேற்று மட்டுமல்ல; மார்ச் இரண்டாவது வாரம் முதல் சட்டப்பேரவையிலும் சொன்னேன்; எனது அறிக்கைகளிலும் சொல்லி இருக்கிறேன்; காணொலிகளிலும் சொல்லி இருக்கிறேன். நோயின் தீவிரத்தை உணர்ந்து எந்த அளவுக்கு தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும் என்றுதான் சுட்டிக்காட்டினேன். அதைக் கூட முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; பொங்கி வழிகிறார்.

“யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை;  எல்லாம் எனக்குத் தெரியும்; தானே எல்லாம்”  என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்துவிட்டதைத் தான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது!

“கரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததுமே அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வருகின்றது” என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை மக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும்.

மீண்டும் சொல்கிறேன்; திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை அரசியல் செய்வதற்கு பல களங்கள் உள்ளன. பேரிடர் காலம் என்பது திசைத் திருப்பல் ஏதுமின்றி  மக்களுக்காகப் பணியாற்றும் களம். ஆகவே, கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தி.மு.க. என்றைக்கும் தயாராக இருக்கிறது.

எனவே, பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை கொச்சைப்படுத்தும் மலிவான மனவோட்டத்தையும், அநாகரிகமான அரசியலையும் கைவிட்டு - நெருக்கடிகள் மிகுந்த இந்த நேரத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்று - மனித குலமே நடுங்கி நிற்கும் இந்தப் பேரிடரிலிருந்து தமிழக மக்களை மீட்டிட பொறுப்புள்ள முதல்வராக, கடமை உணர்வுடன் செயல்பட முன்வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கரானா காலம் முடிந்த பிறகே அரசியல் என்பதை எடப்பாடி நினைவில் ஏந்தி நடக்க வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.