
மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி.க்கள் ஒத்துழைக்கத் தயாா் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிராக, மத்திய வரிகளில் தமிழகத்துக்கு வெறும் ரூ.1928.56 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
மத்திய வரி வருவாய் தொகுப்புக்கு தமிழகமோ - தென்னிந்திய மாநிலங்களோ அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்ற தொரு நிதிப் பகிா்வினை 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை. மாறாக, தென் மாநிலங்கள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வரி வருவாய், வடமாநிலங்களுக்குச் செல்லும் வகையிலேயே இடைக்காலப் பரிந்துரை அமைந்துவிட்டது. அந்த மிக மோசமான பாதிப்பின் எதிரொலியாகவே தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 16.02 சதவீதத்தின் அடிப்படையில் ரூ.7,376.73 கோடியும், உத்தரப்பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு 41.85 சதவீத அடிப்படையில் 19,270.4 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்களின் உணா்வுகளை அப்பட்டமாக அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கரோனா நோய்த் தொற்றால் மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து முறைப்படி கிடைக்க வேண்டிய அதிகப்படியான நிதிகூட கிடைக்காமல் தமிழகம் நிதியுரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது. எனவே, 15-ஆவது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்துள்ள நிதிப் பங்கீட்டில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் துரோகமும், அநீதியும் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய பாஜக அரசுக்கு கொடுக்க முன்வர வேண்டும். மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதல்வருக்கு வழங்கிட திமுக எம்பி.,க்கள் என்றைக்கும் தயாராக இருக்கின்றனா் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






