அதுமட்டுமல்லாமல், 2020-2021-ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூபாய் 32,849 கோடி 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாடு அரசின் முயற்சியின் காரணமாகத்தான். இது கூடத் தெரியாமல், ஏதோ 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகையான ரூ.1928.56 கோடி 2020-2021ஆம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும். 20202021ஆம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகையை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும். 14வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு பரிந்துரைத்த பகிர்ந்தளிக்கக் கூடிய நிதியானது 4.023 சதவீதத்திலிருந்து, 15வது நிதிக்குழு 4.189 சதவீதமாக உயர்த்தி பரிந்துரை செய்தது. இந்த முயற்சியையும் அதனால் தமிழ்நாடு மக்களுக்கு ஏற்படும் நன்மையையும் மூடி மறைத்துவிட்டு, எதிர்க்கட்சித்தலைவர் அறிக்கை விடுவது விந்தையாக உள்ளது.