மணப்பாறை அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; மனைவி, 5 குழந்தைகள் மீட்பு

மணப்பாறை அருகே மழையால் பள்ளியின் கட்டட சுற்று சுவர் இடிந்து அருகிலிருந்த வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த மில் தொழிலாளி செல்வகுமார் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு
மணப்பாறை அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; 6 பேர் மீட்பு
மணப்பாறை அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; 6 பேர் மீட்பு
Updated on
1 min read

மணப்பாறை அருகே மழையால் பள்ளியின் கட்டட சுற்று சுவர் இடிந்து அருகிலிருந்த வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த மில் தொழிலாளி செல்வகுமார் இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது  மனைவி மற்றும் 5 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியில் அரசு உதவிபெறும் நடுநிலைபள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியின் கட்டட சுற்று சுவர் அருகிலேயே 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட காலனி ஓட்டு வீடுகள் உள்ளது. இப்பகுதியில் நிவர் புயல் மற்றும் புரவி புயல் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த பள்ளி கட்டடத்தின் மண் சுற்று சுவர் நள்ளிரவில் அருகேயுள்ள பஞ்சாலை தொழிலாளி செல்வகுமார் என்பவரின் வீட்டின் மேல் விழுந்தது. நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமார், அவரது மனைவி ராஜாத்தி மற்றும் அவரது ஐந்து குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கி மரண பயத்தில் அலறினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடர்பாடுகளிலிருந்து ராஜாத்தி மற்றும் குழந்தைகளை மீட்டெடுத்தனர்.

இதில் இடிபாடுகளுக்கு இடையே செல்வக்குமார் சிக்கிக்கொண்டார். காயமடைந்த ராஜாத்தி ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்கள், இடர்பாடுகளில் சிக்கியிருந்த செல்வக்குமார் உடலை சடலமாக மீட்டனர். 

உடற்கூராய்வுக்காக செல்வக்குமார் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நிகழ்விடத்தில் மணப்பாறை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் செல்வக்குமார் மனைவி ராஜாத்தி மற்றும் அவர்களது 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com