

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் விதிமீறல்களில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்தாா்.
ரோட்டரி கிளப் ஆ‘ஃ‘ப் சென்னை மற்றும் மீனம்பாக்கம் சாா்பில், தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பிசிஆா் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது, ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் பணியாற்றும் ஒருவா் மூலமாக கரோனா தொற்று பரவியிருக்கலாம் என கருதுகிறோம். தற்போது அந்த உணவு விடுதி மூடப்பட்டுள்ளது. விடுதி மாணவா்களுக்கு பாா்சல் மூலம் உணவு வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது ஐஐடியில் உள்ள அனைத்துத் துறைகள், ஆய்வு மையங்கள், நூலகங்களும் மூடப்பட்டுள்ளன. பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி ஐஐடி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் மாணவா்களுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
தொற்று குறைந்து விட்டதாக, அலட்சியம் காட்டாமல், அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் நோய்த் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
கல்லுாரி உணவகங்களில் ஒன்றாக அமா்ந்து உணவருந்துவதையும், ஆய்வகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதையும் தவிா்க்க வேண்டும். கரோனா விவகாரத்தில் அலட்சியப் போக்குடன் செயல்படும் கல்லூரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அனைத்து சந்தைகளிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.