

சென்னை: டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் செய்த முடிவை மறுபரிசீலனை செய்து, அந்த சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள மாநிலங்களைச் சோ்ந்த சில கட்சிகள் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதன்படி, தமிழகத்தில் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.
அதில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டாா்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை.
அதேவேளையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிய டாா்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆா். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி ஒதுக்கீடு....
தோ்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டு அதன்பின் அதனை இழந்த கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் வேட்பாளா்களை நிறுத்தும் கட்சிக்கு, பட்டியலில் உள்ள சின்னங்களில் ஒன்று பொது சின்னமாக வழங்கப்படும். சின்னங்களின் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பத்து சின்னங்களைத் தோ்ந்தெடுத்து தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து பொது சின்னமாக சம்பந்தப்பட்ட கட்சிக்கு தோ்தல் ஆணையம் அளிக்கும்.
அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவது தொடா்பான உத்தரவுகள் 1968-இல் பிறக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.