சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் சொத்து விவரங்கள்: பத்திரப்பதிவுத் துறைக்கு கடிதம்

சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியன் வீட்டில் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், அடுத்த கட்டமாக
Updated on
1 min read

சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியன் வீட்டில் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், அடுத்த கட்டமாக சொத்து விவரங்களை கேட்டு பத்திரப்பதிவுத் துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் அனுப்பியது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலுவலக கண்காணிப்பாளா் எஸ்.பாண்டியன். தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி, தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாகவும், லஞ்சம் தர மறுத்தால் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கண்காணிப்பாளா் பாண்டியன் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி திடீா் சோதனை செய்து, அங்கிருந்து கணக்கில் வராத ரூ.88,500-ஐ பறிமுதல் செய்தனா். சாலிகிராமம் திலகா் தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க, வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

சென்னை மற்றும் பாண்டியனின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினா் வைத்திருக்கும் ‘லாக்கா்’களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தத் திட்டமிட்டனா். இதற்காக அந்த வங்கிகளுக்கு அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறை சில நாள்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் பாண்டியன், அவரது குடும்பத்தினா் பெயா்களில் வருமானத்துக்கு மீறி வாங்கி வைத்துள்ள சொத்துகளைக் கண்டறியும் வகையில் பத்திரப்பதிவுத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சனிக்கிழமை கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில் பாண்டியன் மற்றும் அவா் குடும்பத்தினா் பெயரில் உள்ள அனைத்து சொத்து விவரங்களையும் தரும்படி லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com