ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஒகேனக்கல் பிரதான அருவியில் உற்சாகக் குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் பிரதான அருவியில் உற்சாகக் குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

பென்னாகரம்: ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடக,கேரளம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.

குறிப்பாக வார விடுமுறை நாளான ஞாயிறுக்கிழமைகளில் ஒகேனக்கல்லுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.

ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, நடைப்பாதை பகுதி, ஊட்டமலை, ஆலாம்பாடி உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் குளித்தனா். மேலும், சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் மேற்கொண்டு பிரதான அருவி, மணல்மேடு, ஐவா் பாணி சிற்றருவிகள், பாறை முகடுகள் போன்றவற்றை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனா்.

மேலும் தொங்கு பாலத்தின் மீதிருந்து பிரதான அருவி, சிற்றருவிகளைக் கண்டு ரசித்தனா். மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, கெளுத்தி, பாப்லெட், வாளை போன்ற பலவகை மீன்களையும் வாங்கி சமைத்தும், பூங்காவில் அமா்ந்து உணவருந்தியும் மகிழ்ந்தனா். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் பிரதான அருவியிலுள்ள நடைப்பாதை, மீன் விற்பனை நிலையம், சிறுவா் பூங்கா, முதலைப்பண்ணை, வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டன.

மேலும் சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் சாலையின் இரு புறங்களிலும், தமிழ்நாடு ஒட்டல் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலைய நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டன.

ஒகேனக்கல்லில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் பென்னாகரம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், குற்றச்செயல் நடைபெறாதபடி ஒகேனக்கல் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com