தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திமுகவின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை; திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலமாகும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

News image
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த தொண்டர்களுக்கு மத்தியில் திறந்த ஜீப்பில் வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :22 டிசம்பர் 2020, 10:48 pm

DIN

அதிமுக அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை; திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலமாகும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
 கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிதாக புகார் கூறவில்லை. நான் முதல்வர் ஆனதிலிருந்து அவர் கூறி வந்ததை, தற்போது புகாராக ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
 சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைப்படி... கரோனா பொது முடக்கத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோன்று நிவர், புரெவி புயலால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அனைத்துக் குடும்பங்களிலும் தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டை அரசு மீது சுமத்தி, அதனை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
 இ-டெண்டர்: சாலைப் பணிகளுக்கான டெண்டரை எனது உறவினர் எடுத்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறுவது தவறானது. தற்போது இ-டெண்டர் முறை கடைப்பிடிக்கப்படுவதால் தவறு நடப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் யாரெல்லாம் டெண்டர் எடுத்தார்களோ, அவர்கள்தான் தற்போதும் டெண்டர் எடுத்துள்ளனர். இதில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை.
 உலக வங்கி அரசுக்கு கடன் கொடுக்கும் நிலையில், சாலை அமைக்க வைப்புத் தொகைக்கு வங்கி உத்தரவாதத்துக்குப் பதிலாக ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டுமென்று ஒரு நிபந்தனை விதித்தது. அப்போதுதான், உறவினர் என்று இவர்கள் சொல்லக்கூடியவர் ஆன்லைன் டெண்டரில் கலந்துகொண்டு, ஆன்லைனிலேயே பணமும் செலுத்தியுள்ளார். அது எனக்கு மட்டுமல்ல, யாருக்கும் தெரியாது. டெண்டர் போட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். டெண்டரை திறக்கும்போதுதான் இது தெரிய வருகிறது. இதில் எப்படி ஊழல் நடைபெற்றிருக்கும்? எனவே, ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
 திமுக ஆட்சியில் ஊழல்: திமுக ஆட்சியில் வேண்டுமானால் தவறு நடக்கும். அதற்கு சில எடுத்துக்காட்டுகளைத் தெரிவிக்கிறேன். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மதிப்பீடு ரூ.200 கோடி என்று கொடுத்து, ரூ. 425 கோடி பில் செட்டில்மென்ட் செய்கிறார்கள். மதிப்பீட்டுக்கும், உண்மையான தொகைக்கும் ஏறக்குறைய 10 முதல் 15 சதவீதம் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், ஏறத்தாழ 130 மடங்கு அதிகமாக உள்ளது. இதுதான் ஊழல் என்று நாங்கள் சொல்கிறோம். இதுவரை அதற்கு அவர்கள் மறுப்பே சொல்லவில்லை. நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை வாங்கியிருக்கிறார்கள்.
 உலக வங்கியிலிருந்து பணம் பெற்று அமல்படுத்தும் திட்டத்தை முதலில் திமுக ஆட்சியில்தான் கொண்டு வந்தார்கள். அப்போது ஆற்காடு முதல் திருவாரூர் வரையுள்ள சாலையின் மொத்த நீளம் 377.36 கிலோ மீட்டர். ஒப்பந்தத் தொகையின் மதிப்பு ரூ. 611.70 கோடி. கொடுத்தது ரூ. 773 கோடி. 26.43 விழுக்காடு அதிகரித்துக் கொடுத்துள்ளார்கள். இதுதான் ஊழல்.
 நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரையுள்ள 117.40 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை ரூ. 198.77 கோடி. ஆனால், ரூ. 72.49 கோடி அதிகரித்து ரூ. 271.26 கோடி கொடுத்துள்ளார்கள். 36.47 சதவீதம் அதிகம். அதாவது, இது பட்டியலில் குறிப்பிடப்பட்ட தொகையல்ல, வேலை செய்ய செய்ய அதிகரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
 ராமநாதபுரம் முதல் கட்டுமாவடி வரையுள்ள 143.40 கிலோமீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை ரூ. 143.41 கோடி. ஆனால், 77.67 விழுக்காடு, அதாவது ரூ.111 கோடி அதிகரித்து ரூ. 254.80 கோடி கொடுத்துள்ளார்கள்.
 ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையுள்ள 114.67 கி.மீ. சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை ரூ.119.26 கோடி. ஆனால், 71 சதவீதம், அதாவது ரூ. 84.72 கோடி அதிகரித்து ரூ. 203.98 கோடி கொடுத்துள்ளார்கள். இவ்வளவும் அவர்கள் ஆட்சியில் செய்த தில்லுமுல்லு. திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்த விவரங்களை வைத்துள்ளோம். அது அம்பலமாகப் போகிறது என்றார் அவர்.
 கரோனா பரிசோதனை: வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் அரசின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் மீண்டும் புதிய வகை கரோனா பரவியுள்ளது. அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
 கூட்டணி: எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணியில் தொடர்கின்றன என்றார் அவர்.
 முன்னதாக, முதல்வருக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. எஸ்.பி. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.